இந்தியாவின் கடன் கிடைத்தால் மட்டுமே தமிழ் - சிங்கள புத்தாண்டு!
இலங்கைக்கு இந்தியா வழங்கும் ஆயிரம் மில்லியன் டொலர் கடன் சரியான முறையில் கிடைக்கும் வரை தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்ய முடியாது என அத்தியவசிய உணவு பொருள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் இந்த கடனுதவி கிடைக்கவில்லை என்றால், உணவு பொருட்களை இறக்குமதி செய்ய மாற்று வழிகள் கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளன. டொலர் இல்லாத காரணத்தினால், அவற்றில் உள்ள பொருட்களை இறக்க முடியாதுள்ளது.
இந்தியாவிடம் இருந்து கடனுதவி கிடைத்தாலும் பொருட்களை இலங்கைக்கு இறக்குமதி செய்து, இறக்குவதற்கு நீண்டகாலம் செல்லும். சம்பந்தப்பட்ட துறையினர் விரைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டால், பண்டிகை காலத்தில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்க முடியும் எனவும் செனவிரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
