வெள்ளத்தில் மூழ்கியுள்ள மட்டக்களப்பு: புலம்பெயர்ந்தோரிடம் வேண்டுகோள் விடுத்த சிறிநேசன்
மட்டக்களப்பில்(Batticaloa) வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு புலம்பெயர் தமிழர்களும் பங்களிப்பினை வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வெள்ள நிலைமை தொடர்பில் இன்றைய தினம் (30.11.2024) கள விஜயம் மேற்கொண்ட போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில், “ மட்டக்களப்பின் படுவாங்கரைப் பிரதேசம் உட்பட மண்மனை மேற்கு பிரதேசம் வெள்ளப்பெருக்கினால் மிகவும் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்
மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் 2,425 குடும்பங்களைச் சேர்ந்த 7,404 சேர்ந்த மக்கள் வெள்ளப்பெருக்கினால் இடம்பெயர்ந்துள்ளனர்.
அத்துடன், இன்றைய தினம் வெள்ளம் வடிந்து வருகின்ற நிலையில் அவர்களின் சொந்த இருப்பிடங்களுக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றார்கள்.
இடம்பெயர்ந்த மக்கள் அவர்களுடைய வீடுகளுக்குச் சென்று அவருடைய வீடுகளை துப்புரவு செய்யும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றார்கள்.
மக்களுக்கான நிவாரணம்
இதேவேளை, பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் தொடர்பில் அரச திணைக்களங்களுடாகவும் அரசு சார்பற்ற அமைப்புகள் மற்றும் தனியார் அமைப்புகள் ஊடாகவும் வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக நாம் அறிகின்றோம்.
மேலும், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரசு தலைவர்களை விரைவாக சந்தித்து வெள்ள நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாட வேண்டும்.
அன்றாடம் தொழில் செய்கின்றவர்கள் கூட வீடுகளில் முடங்கி கிடக்கின்றார்கள். எனவே அவர்களுடைய வாழ்வாதாரத்தை இந்த இடைக்காலத்தில் உயர்வடைய செய்ய வேண்டும் என புலம்பெயர் மக்களிடம் நான் அன்பாக வேண்டுகோள் விடுகின்றேன்” என்று அவர் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |