தமிழர்கள் அநுர அரசிடம் எதிர்பார்க்க முடியாது - அடித்துக் கூறும் சிறீதரன்
தமிழருக்கான தீர்வுத் திட்டத்தை அரசு தரும் என்று எதிர்பார்க்கவே முடியாது என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் சிவஞானம் சிறீதரன் (Sivagnanam Shritharan) தெரிவித்துள்ளார்.
மாறாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து தமிழர்கள் சார்ந்து ஒரு கூட்டுநிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றும் சிவஞானம் சிறீதரன் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசியலமைப்பு உருவாக்க விவகாரத்தில் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் சிவஞானம் சிறீதரனிடம் அவரது நிலைப்பாடு தொடர்பில் வினவிய போதே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
தமிழர்களுக்கான அரசியல் தீர்வு
அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழர்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தைப் பொறுத்தமட்டில், அரசாங்கம் எமக்கான தீர்வுத்திட்டத்தைத் தரும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
மாறாக நாமனைவரும் ஒன்றிணைந்து, தமிழர்கள் சார்ந்து ஒரு கூட்டுநிலைப்பாட்டை எடுக்கவேண்டும்.
இப்போது நாங்கள் தான் பசியுடன் இருக்கிறோம். பசியுடன் இருப்பவர்கள் தானே என்ன தேவை என்று கேட்கமுடியும்?
உணவை வைத்திருப்பவன், பசியுடன் இருப்பவனைப் பார்த்து உனக்கு என்ன உணவு வேண்டும் என்று கேட்கப்போவதில்லை. எனவே எம்முடைய பசிக்குரிய உணவு எதுவென்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.
உரிமைக்காகப் போராடி மாண்ட உயிர்கள்
சுமார் 80 வருடங்களாக தமிழர்களாகிய நாம் உரிமைப்பசியுடன் வாழ்கிறோம். அந்த உரிமைப்பசிக்காக நாம் செய்த தியாகங்கள் அளப்பரியவை. அதற்காக ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்திருக்கிறோம்.
எனவே எம்முடைய உரிமைப் போராட்டமும், தமிழர் அரசியலும் உரிமைக்காகப் போராடி மாண்ட உயிர்களின் மீதும், சாம்பல் மேட்டின் மீதும் தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
ஆகவே இற்றைவரை உரிமைகளுக்காகப் போராடிவரும் தமிழினத்தின் தேவை மற்றும் கோரிக்கை என்னவென்பதை நாங்கள் தான் வெளிப்படையாகக் கூறவேண்டும்.
மாறாக அரசாங்கம் கூறும் வரை நாங்கள் காத்திருக்கமுடியாது. இவ்விடயத்தில் நாம் (தமிழரசுக்கட்சி) மாத்திரமன்றி, தமிழ்த்தேசியத்தை நேசிக்கும் சகல கட்சிகளும் இணைந்து ஒரு பொதுநிலைப்பாட்டுக்கு வரவேண்டும் என சிவஞானம் சிறீதரன் (Sivagnanam Shritharan) தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்