ராஜபக்ச ஆதரவு கட்சியுடன் தயா ரத்நாயக்க இணையவில்லை...! ஐ.ம.ச அறிவிப்பு
ஐக்கிய மக்கள் சக்தியுடன் அண்மையில் இணைந்து கொண்ட முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க, தாய்நாட்டு மக்கள் கட்சியின் தலைவர் திலித் ஜயவீரவை இன்று சந்தித்தமை தொடர்பில் வெளியான செய்திகளை, ஐக்கிய மக்கள் சக்தியின் அதிபர் தேர்தல் செயற்பாட்டுப் பிரதானி சுஜீவ சேனசிங்க நிராகரித்துள்ளார்.
தயா ரத்நாயக்க தற்போது தாய்நாட்டு மக்கள் கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகளும் பொய்யானவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தயா ரத்நாயக்க
ஐக்கிய மக்கள் சக்தியுடன் அண்மையில் இணைந்து கொண்ட முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க, தாய்நாட்டு மக்கள் கட்சியின் தலைவர் திலித் ஜயவீரவை இன்று சந்தித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பொரளையில் உள்ள தாய்நாட்டு மக்கள் கட்சியின் தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
தயா ரத்நாயக்கவை ஐக்கிய மக்கள் சக்தியில் இணைத்தமை தொடர்பில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நேற்று விமர்சனமொன்றை முன்வைத்திருந்த நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
போலி செய்திகள்
இந்த நிலையில், சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வெளியாகும் செய்திகள் பொய்யானவை என சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
திலித் ஜயவீர மற்றும் தயா ரத்நாயக்கவுக்கிடையில் இன்றைய தினம் எந்தவொரு சந்திப்பும் நடைபெறவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல் பிரசாரம்
இருவருக்கிடையிலான சந்திப்பு தொடர்பில் பகிரப்பட்டு வரும் புகைப்படம், பழையது எனவும், இதுபோன்ற புகைப்படத்தை பயன்படுத்தி அரசியல் பிரசாரம் செய்து வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் அவர் கூறியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியை பலப்படுத்துவதற்காக பல்வேறு தரப்பினரும் ஒன்றிணைவதால், இவ்வாறான போலிப் பிரசாரங்கள் எதிர்காலத்திலும் இடம்பெறலாம் எனவும் இது தொடர்பில் அவதானத்துடன் செயல்பட வேண்டுமெனவும் சுஜீவ சேனசிங்க வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |