அதிபர் தேர்தலில் சரத் பொன்சேகா! ஆதரிக்க மறுக்கும் ஐக்கிய மக்கள் சக்தி
இலங்கையில் (Sri Lanka) இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா (Sarath Fonseka) களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தமது கட்சியின் எந்தவொரு உறுப்பினரும் அவருடன் இணையப் போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார (Ranjith Madduma Bandara) தெரிவித்துள்ளார்.
அதேநேரம், அதிபர் வேட்பாளராக களமிறங்குவது தொடர்பில் சரத் பொன்சேகா இதுவரை ஐக்கிய மக்கள் சக்திக்கு உத்தியோகப்பூர்வமாக எதனையும் அறிவிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் சரத் பொன்சேகா களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
அதிபர் தேர்தல்
இந்த விடயம் தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு சரத் பொன்சேகாவால் அடுத்த மாதம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.
எனினும், எந்தவொரு கட்சியுடனும் இணையாது சுயேட்சை வேட்பாளராக அவர் அதிபர் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த நடவடிக்கைக்கான ஆதரவை பெற்றுக் கொள்வது தொடர்பான பேச்சுக்களை சரத் பொன்சேகா ஐக்கிய மக்கள் சக்தியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முன்னெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கட்சிக்குள் பிளவு
இந்த நிலையில், சரத் பொன்சேகா தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இதுவரை ஐக்கிய மக்கள் சக்தியிடம் எதனையும் குறிப்பிடவில்லை என ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்தும் வகையில் ஊடகங்கள் இவ்வாறான செய்திகளை வெளியிடுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சில உறுப்பினர்கள் கட்சியை விட்டு பிரிந்து சென்றுள்ளதாகவும் வேறு கட்சிகளுடன் இணைய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை எனவும் அவர் கூறியுள்ளார்.
சிறுபான்மை கட்சிகள்
மேலும், சரத் பொன்சேகா அதிபர் தேர்தலில் களமிறங்கும் பட்சத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் எந்தவொரு உறுப்பினரது ஆதரவும் அவருக்கு கிடைக்காது என ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து உறுப்பினர்களும், கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை (Sajith Premadasa) அதிபராக்குவதற்காக பாடுபடுவர்கள் எனவும் ஆதரவளிப்பார்கள் எனவும் அவர் உறுதியாக தெரிவித்துள்ளார்.
மேலும், அதிபர் மற்றும் நாடாளுமன்ற தேர்தலை அடிப்படையாக கொண்டு சிறுபான்மை கட்சிகளுடன் தற்போது ஐக்கிய மக்கள் சக்தி பேச்சுக்களை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளதாக அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |