சஜித் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தை கலைத்த ரணில்: கிளம்பும் எதிர்ப்புகள்
ஐக்கிய மக்கள் சக்தியினால் நேற்று கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியின் மீது மேற்கொள்ளப்பட்ட நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோக நடவடிக்கைக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்படும் என அந்த கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இதன்படி, சிறிலங்கா பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் காவல்துறையினருக்கு எதிராக குறித்த மனு தாக்கல் செய்யப்படுமென இன்று(31) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரசாங்கத்தை எதிர்த்தும், அதிபர் ரணில் விக்ரமசிங்கவை எதிர்த்தும் கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தி நேற்றைய தினம் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தது.
ரணிலின் பணிப்புரை
தொடர்ந்தும் அவர் கூறுகையில், “இந்த ஆர்ப்பாட்டம் வெற்றிகரமான ஆர்ப்பாட்டமொன்று. இதனை ஏற்றுக் கொள்ள முடியாத ரணில் விக்ரமசிங்க, குறித்த ஆர்ப்பாட்டத்தை கலைக்க, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு பணிப்புரை விடுத்தார்.
இதையடுத்து, காவல்துறையினர் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்புகை பிரயோகத்தை மேற்கொண்டனர்.
இதனால் பாதிக்கப்பட்ட ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், எனினும், இவ்வாறான நடவடிக்கைகளின் மூலம் எம்மை நிறுத்த முடியாதென்பதை ரணில் விக்ரமசிங்க நினைவில் கொள்ள வேண்டும்.
அநீதியான முறை
இந்த நிலையில், சிறிலங்கா அரசாங்கத்துக்கும் அதிகாரிகளுக்கும் நான் ஒன்றை கூறிக் கொள்ள விரும்புகிறேன், சட்ட ரீதியாக எம்மை எதிர்கொள்ளுங்கள்.
அநீதியான முறையில் எமக்கு எதிராக செயல்பட முயற்சிக்காதீர்கள். அவ்வாறு நடந்து கொள்ளும் பட்சத்தில் நீதிமன்றத்துக்கு பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
எதிர்க்கட்சித் தலைவர் முன்னெடுக்கும் அரசியல் நடவடிக்கைகளை அடக்க முயற்சிக்க கூடாது. நிகழ்நிலைக் காப்பு சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை பயன்படுத்தி எம்மை கட்டுப்படுத்த முடியாது” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |