இரண்டு பட்டதா ஐக்கிய மக்கள் சக்தி? வெளிவந்த தகவல்
எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான அணியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணையவுள்ளதாக வெளியாகும் தகவலை ஐக்கிய மக்கள் சக்தி நிராகரித்துள்ளது.
சஜித் அணியில் உள்ள சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட குழுவினர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையவுள்ளதாக, நாடாளுமன்றம் வரவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணிலை எதிர்க்கட்சித் தலைவராக்குவதற்கு நகர்வை அவர்கள் முன்னெடுத்துவருகின்றனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையிலேயே இந்தத் தகவலை ஐக்கிய மக்கள் சக்தி நிராகரித்துள்ளது. அத்துடன், சஜித்துக்கு நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானமொன்றையும் அதிரடியாக நிறைவேற்றியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு நம்பிக்கை தெரிவிக்கும் யோசனை ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளின் ஆதரவுடன் நேற்றுமுன் தினம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதன்போது கொரோனா நெருக்கடி மற்றும் சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.
அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் நடவடிக்கைகள் தொடர்பில் சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன, சரத் பொன்சேகா, மனோ கணேசன், பழனி திகாம்பரம், ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், ஐக்கிய மக்கள் சக்தி இரண்டு படக்கூடும் எனவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த விடயம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. இதன்போது சம்பிக்க, மனோ, ஹக்கீம் உள்ளிட்டவர்கள் இணைந்து சஜித்துக்கு நம்பிக்கை தெரிவிக்கும் யோசனையை முன்வைத்துள்ளனர்.
சரத் பொன்சேனா, லக்ஷ்மன் கிரியல்ல உள்ளிட்டவர்கள் அதனை வழிமொழிய, யோசனை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பின்ர திஸ்ஸ அத்தநாயக்க, எதிர்க்கட்சித் தலைவர் பதவியை எவராலும் பறித்துவிட முடியாது எனக் கூறினார்.