சஜித் தரப்பில் ஏற்பட்டது பிளவு -ரணிலை ஆதரிக்க தயாராகும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
எதிர்வரும் அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றால், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை பிரதமராக நியமிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருதுகின்றனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிபந்தனைக்குட்பட்ட ஆதரவை முன்மொழிந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போது அமைச்சராக உள்ளவருமான ஒருவர் கொழும்பு ஊடகத்திடம் தெரிவித்தார்.
புதிய உடன்படிக்கைக்கு அவசியமில்லை

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன, கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஏற்கனவே அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்ததாகவும், பொதுத் தேர்தல் அல்லது அதிபர் தேர்தல் நடத்தப்பட்டால் சஜித் பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் என்று கோரியதாகவும் தெரிவித்தார்.
“ விக்ரமசிங்க, சஜித் பிரேமதாசவை பிரதமராக நியமிப்பார் என்பது வெளிப்படையானது என்பதால் புதிய உடன்படிக்கைக்கு அவசியமில்லை,” என்று அவர் கூறினார்.
இரு தலைவர்களும் இரு கண்கள்

இதேவேளை, சஜித் பிரேமதாசவை விக்ரமசிங்கவுடன் ஒப்பிடுமாறு எஸ்.ஜே.பி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்னவிடம் ஊடகவியலாளர் ஒருவர் வினவியபோது, இரு தலைவர்களும் தனது இரு கண்கள் போன்றவர்கள் எனத் தெரிவித்தார்.
எனினும், இந்த விவகாரத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பிளவுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.