இறந்து கிடந்த உடல்களில் இருந்த நகைகளை திருடிய இராணுவம் : பரபரப்பு குற்றச்சாட்டு
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளின் உடலங்களில் காணப்பட்ட நகைகளை இராணுவம் திருடியதாக களத்தில் இருந்த வயோதிப பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழரசு கட்சியின் (ITAK) ஏற்பாட்டில் இன்றையதினம் (16) யாழ் (Jaffna)- சாங்கானை பகுதியில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வின் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”தடைக் கற்களை படிக்கற்களாக பாவித்து நாங்கள் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் முன்னேறிக்கொண்டிருந்தோம். அப்போது இராணுவம் எங்களை நோக்கி சுட்டது.
இராணுவத்தினரின் செயல்
துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த எங்களது உறவுகளின் உடலங்களை நாங்கள் தாண்டி வந்து கொண்டிருந்தோம். இதன்போது இராணுவத்தினர், இறந்து கிடந்த உடல்களில் காணப்பட்ட நகைகளை கழற்றி தங்களது சப்பாத்துகளிலும், உடைகளிலும் மறைத்து வைத்ததை அவதானித்தோம்.
நாங்கள் உயிர்களை மாத்திரம் இழக்கவில்லை, எங்களது உடைமைகளையும் இழந்தோம். இறுதி நேரத்தில் உணவுக்கே பாரிய நெருக்கடியை எதிர்நோக்கினோம். இறுதியில் இருந்த வாகனங்கள் உட்பட அனைத்து சொத்துகளையும் விற்று கஞ்சி காய்ச்சி குடித்து உயிரை தக்கவைத்தோம்.
எனினும் 12,13ஆம் திகதிகளில் அந்த கஞ்சிக்கே வழியில்லாத நிலை ஏற்பட்டது. அரிசி இல்லை, சமைப்பது என்றால் பாத்திரங்கள் இல்லை, உடைகள் இல்லை, பெண்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கான வசதிகள் இல்லை.
தொடர்ந்து யுத்தம் நடக்கும்போது ஓடிக்கொண்டிருந்தோம். இன்றைக்கும் எங்களால் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை எமக்கு உள்ளது” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
