வரவு செலவு திட்டம் 2024 : எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தை நிராகரிக்கும் சிறிலங்கா அரசாங்கம்
இலங்கையின் அமைப்பை மாற்றும் வகையில் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டம் தொடர்பில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அது விசித்திர மற்றும் கற்பனைக் கதைகளை உள்ளடக்கி தயாரிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கடினமான காலப்பகுதியில் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் சிறிலங்காவின் நிதியமைச்சராக அதிபர் ரணில் விக்ரமசிங்க நியாயமான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்துள்ளதாக இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் கூறியுள்ளார்.
வரவு செலவு திட்ட விமர்சனம்
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “வரவு செலவுத் திட்டத்தை விமர்சித்து எதிர்க்கட்சிகள் பாரம்பரிய அரசியலில் ஈடுபட்டாலும், நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை உணர்ந்து சிறிலங்கா அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
வரிசை சகாப்தத்தில் எதிர்மறைப் பொருளாதாரத்தைக் கொண்டிருந்த இலங்கையின் வளமான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இந்த ஆண்டும் சவாலான வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்க வேண்டிய நிலை அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது.
பொருளாதாரத்தை வலுப்படுத்தும் திட்டம்
இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி, நெருக்கடி நிலையிலிருந்து விடுபட வேண்டும் என்ற மனோபாவத்தின் அடிப்படையில் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் ஒவ்வொரு துறைகளிலும் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் நோக்கிலான முன்மொழிவுகளுடன் ரணில் விக்ரமசிங்க வரவு செலவு திட்டத்தை தயாரித்துள்ளார்.
இந்த முன்மொழிவுகள் நடைமுறைப்படுத்தப்பட்டால், மிகக் குறுகிய காலத்தில் ஒரு அபிவிருத்தி நாட்டை உருவாக்க முடியும்.
பாரம்பரிய அரசியல்
எதிர்க்கட்சி எப்போதும் பாரம்பரிய அரசியலையே செய்து வருகிறது.
மக்களின் வேதனையையும், இரத்தத்தையும், வியர்வையும், கண்ணீரையும் கண்டு இந்த எதிர்க்கட்சி மகிழ்ச்சி அடைகிறது.
வரவு செலவு திட்டத்தை வைத்து கட்சிகள் அரசியல் செய்யதாலும், அவர்களுக்கான தக்க பதிலடியை மக்கள் தேர்தலின் போது கொடுப்பார்கள்” என கூறியுள்ளார்.