இலங்கை மாணவர்களும் சீனம் மற்றும் ஹிந்தி கற்க வேண்டும் - ரணில் வலியுறுத்து
மாறிவரும் உலகிற்கு ஏற்றவாறு இலங்கையின் பிள்ளைகள் எதிர்காலத்தில் ஹிந்தி மற்றும் சீன மொழிகளைக் கற்க வேண்டும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நுகேகொட அனுலா வித்தியாலய பரிசளிப்பு நிகழ்வின் போது உரையாற்றிய போதே அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
புதிய கல்வி முறைமை

இதுதொடர்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில், “இலங்கையின் கல்வியானது எதிர்காலத்திற்கு ஏற்றவாறு பாரியளவில் மாற்றப்பட வேண்டும்.
நாம் புதிய பாடங்களை அறிமுகப்படுத்த வேண்டும். மாறிவரும் உலகிற்கு ஏற்றவாறு நமது குழந்தைகள் ஆங்கிலத்துடன் கூடுதலாக சீனம் மற்றும் ஹிந்தியை கற்க வேண்டும்.
தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய பாடங்களை நாம் அறிமுகப்படுத்த வேண்டும்.
பாடசாலைகளில் மாணவர்கள் செல்போன்கள் மற்றும் வலையொளி (பாட்காஸ்ட்கள்) மூலம் தங்கள் கல்வியைத் தொடர வேண்டும்.
அத்துடன் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மரபணு தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோட்டிக்ஸ் ஆகியவற்றை நாம் கற்பிக்க வேண்டும்.
புதிய தொழில்நுட்பம் எதிர்காலத்தில் ஒன்றரை டிரில்லியன் டொலர்களை உலகளாவிய வருவாயைக் கொண்டுவரும். அதில் ஒரு அங்கமாக இருப்பதைத் தவிர இலங்கைக்கு வேறு வழியில்லை” என்றார்.