மைத்திரிபாலவுக்கு 7 வருட சிறை தண்டனை! சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை
முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 7 வருட சிறைத்தண்டனை வழங்க முடியுமென பிவித்துரு ஹெல உருமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாத சம்பவத்துடன் தொடர்புடைய உண்மையை மறைத்த குற்றச்சாட்டுக்காக இவ்வாறாக சட்டத்துக்கமைய அவர் கைது செய்யப்படலாமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று (25) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே, உதய கம்மன்பில இதனை தெரிவித்துள்ளார்.
உண்மையை மறைத்த மைத்திரி
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பான உண்மையை மறைத்த முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவை கைது செய்யுமாறு நாம் வலியுறுத்தினோம்.
எனினும், அவரது கருத்தை அடிப்படையாக கொண்டு கைது செய்ய முடியாதென காவல்துறையினார் தெரிவித்தனர்.
அத்துடன், நீதிமன்றில் அவர் முன்வைக்கும் கருத்தை அடிப்படையாக கொண்டு அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.
கைது நடவடிக்கை
காவல்துறையினரின் இந்த பொறுப்பற்ற பதிலை நான் எதிர்க்கிறேன். மைத்திரிபால சிறிசேன முன்வைத்த கருத்தின் அடிப்படையில் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கலாம்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பது, வேறு தரப்பினரை விசாரணைக்குட்படுத்துவது, கைது நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்ற நடவடிக்கைகளை காவல்துறையினரால் முன்னெடுக்கலாம்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்டவர் தொடர்பான உண்மையை நீதிமன்றில் மாத்திரம் கூறுவதாக முன்னாள் அதிபர் தெரிவித்துள்ளார்.
சட்டபுத்தகம்
எனினும், அவர் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சந்தேகநபராக கூறப்படும் நபரொருவரை குற்றவாளியா இல்லையா என்பதை மாத்திரமே நீதிமன்றம் கூற முடியும்.
விசாரணைகளை முன்னெடுப்பது காவல்துறையினர். ஒருவர் தனக்கு தெரிந்த உண்மைகளை காவல்துறையினரிடமே கூற வேண்டுமென சட்டபுத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், உண்மையை மறைப்பது தண்டிக்கத்தக்க குற்றமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்டது யார் என்பதை அறிந்திருந்தும் அதனை காவல்துறையினரிடம் தெரிவிக்க முடியாதென கூறி மைத்திரிபால சிறிசேன சட்டத்தை மீறியுள்ளார்.
இந்த நிலையில், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமென்பதை காவல்துறையினர் இப்போதாவது தெரிந்து கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |