கிறிஸ்தவ ஆலயங்களுக்கு வழங்கப்படவுள்ள விசேட பாதுகாப்பு! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
பெரிய வெள்ளிக்கிழமை (29) மற்றும் உயிர்த்த ஞாயிறு (31) தினத்தன்று இலங்கையிலுள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களுக்கும் விசேட பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.
இதற்கமைய, ஆலயங்களுக்கு வரும் யாத்திரிகர்கள் மற்றும் அவர்களது பயணப்பொதிகளை சோதனையிடும் விசேட வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடி நடைமுறைப்படுத்துமாறு காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
விசேட வேலைத்திட்டம்
சமூக காவல் குழுக்கள், அந்தந்த தேவாலயங்களின் பாதிரிமார்கள் மற்றும் அமைப்பாளர்களுடன் இணைந்து இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அனைத்து காவல் பிரிவுகளுக்கும் பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்களுக்கு காவல்துறை மா அதிபர் தேஷபந்து தென்னகோன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ஆலயங்களின் பாதுகாப்பு
அத்துடன், ஆலயங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு காவல்துறை மா அதிபர் சகல பிரிவுகளுக்கும் பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, காவல் நிலையங்களுக்கு பொறுப்பான மாவட்ட அலுவலர்கள் நாளை (26) மற்றும் நாளை மறுதினம் (27) தங்கள் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு தேவாலயங்களுக்கு சென்று பாதுகாப்பு பணிகளை சரிபார்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |