தேர்தலுக்கு தயாராகும் தெற்காசிய நாடுகள் : பிரித்தானிய அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்!
தேர்தலை அடுத்த ஆண்டு நடத்த தயாராகும் தெற்காசிய நாடுகளில் இலங்கையும் அங்கம் வகிப்பதாக பிரித்தானிய அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்படி, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகள் அடுத்த ஆண்டில் தங்கள் நாடுகளில் தேர்தலை நடத்துவதற்கு தயாராகி வருவதாக பிரித்தானிய அரசாங்கம் கூறியுள்ளது.
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகள் வேவ்வேறு நிலைகளில் அடுத்த ஆண்டு தேர்தல்களை நடத்தவுள்ளதாக பிரித்தானிய வெளியுறவு மற்றும் பொதுநலவாய மேம்பாட்டுப் பணியகத்தின் அமைச்சர் ஆன் மேரி ட்ரெவெல்யன் தெரிவித்துள்ளார்.
தெற்காசிய நாடுகள்
தெற்காசிய நாடுகளில் நடைபெறவுள்ள தேர்தல்கள் தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, பதிலளிக்கும் போதே, அவர் இதனை கூறியுள்ளார்.
வெளிப்படைத்தன்மை மற்றும் ஜனநாயகத்துடனான ஆட்சியே மக்களின் எதிர்பார்ப்பு எனவும் அதுவே நாட்டின் நீண்ட கால நிலைத்தன்மையின் அடித்தளமாக இருப்பதாக பிரித்தானியா நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலின் முக்கியத்துவத்தை தெற்காசிய நாடுகளுக்கு வலியுறுத்துவதாக ஆன் மேரி ட்ரெவெல்யன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், குடிசார் சமூகம், ஊடகங்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் மீதான துன்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்பது தொடர்பில் பிரித்தானியா அழுத்தம் கொடுப்பதாகவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |