படையினர் வசமுள்ள தமிழ் மக்களின் காணிகள் : முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
வடக்கு - கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் காணிகளை சட்டவிரோதமாக கபளீகரம் செய்து வைத்திருக்கும் இலங்கை அரசாங்கம் அந்த காணிகளை மக்களிடம் கையளிப்பதை ஏதோ அந்த மக்களுக்கு இனாமாகக் கொடுப்பது போன்று விளம்பரப்படுத்துகின்றதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க. பிரேமச்சந்திரன் (Suresh Premachandran) தெரிவித்துள்ளார்.
யுத்தம் முடிவடைந்து பதினாறு வருடம் முடிவடைந்த நிலையிலும் அந்தக் காணிகளுக்கு உரித்தான மக்களிடம் அதனைக் கையளிக்காமல் படையினரே தம்வசம் வைத்துள்ளனர் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ''இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழக்கூடிய வடக்கு-கிழக்கு பிரதேசங்களில் விவசாய அபிவிருத்தி என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகளில் தொலைதூரங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டார்கள்.
சிங்கள குடியேற்றங்கள்
இதனால் தமிழ் மக்களுக்கு உரித்தான காணிகள் சிங்கள மக்களுக்குப் போய்ச்சேர்ந்தது. இதற்கு அடிப்படைக் காரணமாக தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் அவர்களை சிறுபான்மையினராக்குவதே தென்னிலங்கை ஆளும் வர்க்கத்தின் நோக்கமாக இருந்தது.
இவற்றிற்கெதிரான பல்வேறுபட்ட போராட்டங்களை தமிழ் மக்கள் நடத்தினாலும்கூட ஒவ்வொரு அரசாங்கமும் பலாத்கார சிங்கள குடியேற்றங்களை ஒரு கொள்கையாகவே கொண்டிருந்தது.
வெறுமனே காணிகளைப் பிடிப்பது மாத்திரமல்லாமல், மொழிவாரியாக, கல்வி வாரியாக பல்வேறுபட்ட வழிமுறைகளிலும் தமிழ் மக்கள் அடக்கி ஒடுக்கப்பட்டனர். இதற்கெதிரான போராட்டங்களும் தொடர்ந்துகொண்டே இருந்தது.
இந்தப் போராட்டங்களுக்கு எதிராக அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிட்டபோது அரச பயங்கரவாதத்தை எதிர்கொள்ள வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டார்கள். இதன் காரணமாகவே பல்வேறுபட்ட இயக்கங்கள் தோற்றம் பெற்றதுடன் மிக நீண்டகால ஆயுதப்போராட்டத்திற்கும் அது வழிவகுத்தது.
இந்தப் போராட்ட காலகட்டத்தில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பல்லாயிரம் ஏக்கர் காணிகள் முப்படையினராலும் காவல்துறையினரினாலும் பலவந்தமாகக் கைப்பற்றப்பட்டது.
இராணுவத்தினர் இவற்றைக் கைப்பற்றுவதற்கான எவ்வித சட்ட உரித்தோ அல்லது தார்மீக நெறிமுறைகளோ இல்லாவிட்டாலும் கூட அக்காணிக்கு உரித்தான மக்கள் அங்கிருந்து அகற்றப்பட்டு அவர்களின் காணிகள் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டது.
யுத்தம் முடிவடைந்து பதினாறு வருடங்கள்
இப்பொழுது யுத்தம் முடிவடைந்து பதினாறு வருடங்கள் முடிவடைந்த நிலையிலும் இன்னும் அந்தக் காணிகளுக்கு உரித்தான மக்களிடம் அதனைக் கையளிக்காமல் படையினரே தம்வசம் வைத்துள்ளனர்.
சட்டவிரோதமாகக் கைப்பற்றப்பட்ட காணிகளை யுத்தம் முடிந்து பதினாறு வருடங்கள் கழிந்த பின்னரும் படையினர் தம்வசம் வைத்திருப்பதுடன் அவற்றிற்கு உரிமை கோரவும் முற்படுகின்றனர்.
எதிர்த்தரப்பிலிருந்து அனைத்துக் காணிகளும் விடுவிக்கப்படும் என்று கூறும் சகல கட்சிகளும் ஆட்சிக்கு வந்தவுடன் அதனை மறந்துவிடும் சூழ்நிலைதான் நிலவுகின்றது.
இன்றிருக்கக்கூடிய முப்படைகளின் தளபதியான ஜனாதிபதியும்கூட ஆட்சிக்கு வந்து ஒரு வருடமாகியும் மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆக்கபூர்வ நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளவில்லை.
ஊழலுக்கு எதிராக இலஞ்ச லாவன்யங்களுக்கு எதிராக கைதுகள் வழக்குகள் என்று செயற்படும் அரவு சட்டவிரோதமாகக் கையகப்படுத்தியுள்ள காணிகளை விடுவிப்பதில் மாத்திரம் பின்னடித்துக்கொண்டே இருக்கின்றது. மக்களின் காணிகளை வைத்திருப்பதற்கான எவ்வித சட்டபூர்வமான அருகதையும் காணிகளைக் கபளீகரம் செய்து வைத்திருப்பவர்களுக்கு இல்லை.
ஆகவே, இன்று தமிழ் மக்களின் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்ப்போம் என்று கூறுகின்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த காணிகள் தொடர்பான திட்டவட்டமான முடிவினை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். அல்லாவிடின் இவர்களும் சட்டவிரோத நடவடிக்கைக்குத் துணைபோகிறவர்கள்தான் என்பதுதான் தமிழ் மக்களின் பார்வையாக இருக்கும்.
பாரிய கட்டுமானங்கள்
கொழும்பிலோ, காலியிலோ, ஹம்பாந்தோட்டையஜலோ சிங்கள மக்களுக்குச் சொந்தமான காணிகளை ஆளும் தரப்பினரால் இவ்வாறு பலாத்காரமாகப் பிடித்து வைத்திருக்க முடியுமா? அவற்றில் பாரிய கட்டுமானங்களை உங்களால் மேற்கொள்ள முடியுமா? அதனை படையினர் விவசாயம் செய்யும் நிலமாக உங்களால் மாற்ற முடியுமா? இதற்கு சிங்கள மக்கள் இடம்கொடுப்பார்களா?
ஆனால் இவை அனைத்தையும் தமிழ் பிரதேசங்களில் நீங்கள் செய்கிறீர்கள். தமிழ் மக்கள் எக்கேடு கெட்டுப் போனாலும் பரவாயில்லை என்ற நிலைப்பாட்டை தேசிய மக்கள் சக்தியும் எடுக்கின்றதா? என்ற கேள்வி மக்கள் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
நாங்கள் இனவாதிகள் அல்ல, மதவாதிகள் அல்ல தமிழ் மக்களுக்கான அனைத்து உரிமைகளையும் வழங்குவோம் என அடிக்கடி முழக்கமிடுகிறீர்களே ஆனால் அதில் ஏதேனும் ஒன்றாவது நடைமுறையிலுள்ளதா?
உங்களது முப்படையினரில் மூன்றில் இரண்டிற்கும் மேற்பட்ட பெரும்பகுதி வடக்கு-கிழக்கிலேயே நிலைகொண்டுள்ளது. இவர்களது முகாம்களுக்காகவும் பயிற்சிக்காகவும் படையணிகளின் விளையாட்டிற்காகவும் அவர்களது விவசாயத்திற்காகவும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பல்லாயிரம் ஏக்கர் காணிகளை நீங்கள் பிடித்து வைத்திருக்கிறீர்கள்.
யுத்தம் முடிந்து பதினாறு வருடங்கள் கழிந்த நிலையில் இங்கு எவ்வித துப்பாக்கிக் கலாசாரமும் இல்லை. ஆனால் தென்பகுதியில் நாளாந்தம் துப்பாக்கிச் சூடும், கொலைகளும் நாளாந்தம் நடைபெறுகின்றன.
படையினரை தென்பகுதியிலுள்ள சிங்கள மக்களின் பாதுகாப்பிற்கு அனுப்புவதினூடாக தமிழ் மக்களுக்கான காணிகளை அவர்களிடமே கையளிக்க முடியும் என்பதுடன் தென்பகுதி மக்களும் அச்சமின்றி வாழ்வார்கள்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
