ஊழல் ஒப்பந்தகாரர்கள் இல்லாத ஒரேயொரு தெற்காசிய நாடாக இலங்கை
அரசாங்கத்துக்கான கொள்வனவு நடவடிக்கைகளில் ஊழல் புரிந்த ஒப்பந்தகாரர்களை கறுப்புப்பட்டியலில் இணைக்காத ஒரேயொரு தெற்காசிய நாடாக இலங்கை இடம்பெற்றுள்ளதாக வெரிட்டே ரிசேர்ச் நிறுவனம் முன்னெடுத்த ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
2006 ஆம் ஆண்டு முதல் பின்பற்றபட்டுவந்த கொள்முதல் வழிகாட்டுதல்களில் உள்ள இடைவெளிகள் இதற்கு பிரதான காரணமாக இருக்கலாம் எனவும் அந்த ஆய்வு தொடர்பான அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மருந்துக் கொள்முதல் போன்ற சில விடயங்களை தவிர இலங்கையில் பெரும்பாலான அரச கொள்முதல்களிலும் இந்த வழிகாட்டல்கள் பின்பற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சின் கீழ்
ஊழலை எதிர்த்து நிதி நிர்வாகத்தை மீட்டெடுக்க இந்த இடைவெளிகளை அவசரமாக சரிசெய்வதன் முக்கியத்துவத்தையும் குறித்த ஆய்வு அறிக்கை வலியுறுத்துகிறது.
கடனை திருப்பிச் செலுத்த தவறிய ஒப்பந்தக்காரர்களை கறுப்புப் பட்டியலில் சேர்ப்பது மட்டுமல்லாமல் அவர்களின் பெயர்களை பொது தரவுத்தளத்தில் வெளியிடவும் இலங்கையில் ஏற்பாடுகள் உள்ளன.
எவ்வாறாயினும் நிதி அமைச்சின் கீழுள்ள அரச நிதித் திணைக்களத்தினால் பராமரிக்கப்படும் இந்த தரவுத்தளம் வெற்றிடமாக உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரை
எனவே 2023 ஜூலை வரை, நேபாளம் 629 ஊழல் ஒப்பந்ததாரர்களின் பட்டியலைப் புதுப்பித்துள்ளதுடன் பங்களாதேஷில் 510 பேர் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்குள் சர்வதேச ரீதியில் சிறந்த நடைமுறைகளை பிரதிபலிக்கும் பொது கொள்முதல் சட்டத்தை இலங்கை இயற்ற வேண்டும் என்பது சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய பரிந்துரைகளில் ஒன்றாக உள்ளதாகவும் வெரிட்டே ரிசேர்ச் ஆய்வு நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |