வலி நிறைந்த நினைவுகள்... யுத்தகாலத்தில் கருணா குழுவால் ஆயுதமுனையில் கடத்தப்பட்டவர் உயிரிழந்தார் .!
வெள்ளவாய பகுதியில் பாலா ஸ்ரோஸ் உரிமையாளர் பொன்னையா செல்வராசா இன்றைய தினம் இறைவனடி சேர்ந்தார்.
2007 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 6 ஆம் திகதி இரவு 8:30 மணியளவில் ஆயுதங்களுடன் வந்த 6 பேர் கொண்ட இராணுவப்புலனாய்வு மற்றும் கருணா குழுவால் பொன்னையா செல்வராசா , சிவஞானம் செல்வதீபன் ஆகியோர் கடத்தப்பட்டு மூன்று மாதங்கள் வெலிகந்தை காட்டுப்பகுதியில் ஆயுத முனையில் தடுத்து வைக்கப்பட்டனர்.
யுத்தகாலத்தில் வர்த்தகர்களை குறிவைத்து
யுத்தகாலத்தில் வர்த்தகர்களை குறிவைத்து கருணா குழுவினர் கப்பம் கோரி கடத்தல்களை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் நீண்டகாலமாக வெள்ளவாய பகுதியில் வர்த்தக நிலையங்களை நடாத்தி வந்த பொன்னையா செல்வராசாவை கடத்தி கப்பம் கோரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அங்கு பணிபுரிந்த செல்வதீபனை விசாரணை செய்யவேண்டும் என்ற போர்வையில் உரிமையாளர் செல்வராசாவும் விசாரணைக்கு வரவேண்டும் என்று இருவரையும் வெள்ளைவானில் வலிந்து கடத்தி சென்றனர் .
முதல் கட்டமாக ஐந்து கோடி பணம் கோரப்பட்ட நிலையில் அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை என்று கூற 20 தினங்களுக்கு பின்னர் இரண்டு கோடி பணம் கோரப்பட்டது.
அதற்கும் அவ்வளவு பணம் தன்னிடமில்லை என்று உரிமையாளர் தெரிவிக்க மூன்றாம் கட்டமாக ஒரு கோடி பணம் கோரப்பட்டது.
இதனை செலுத்தவறினால் இருவருக்கும் மரண தண்டணை என்பதை ஆயுததாரிகள் உறுதியாக தெரிவித்து விட்டனர்.
செல்வராசாவின் குடும்பத்தாருடன் தொடர்பில் இருந்த ஆயுததாரிகள் தாம் கோரும் பணம் குறித்த நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்று கடும் தொனியில் தெரிவித்துள்ளனர்.
குடும்பத்தாரும் பல போராட்டங்களுக்கு பின் பணம் சேகரித்து அவர்கள் கோரும் பணத்தை வழங்கிய பின்னர் உரிமையாளர் செல்வராசாவை விடுக்க இணக்கம் தெரிவித்தனர்.
செல்வதீபனுக்கு மரண தண்டனை அல்லது தொடர்ந்து தடுத்து வைக்குமாறு மேல் இடத்தில் இருந்து உத்தரவு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
செல்வராசாவின் தாழ்மையான கோரிக்கைக்கு பின்னர் கடந்த 2007 ஆம் ஆண்டு ஏழாம் மாதம் 28 ஆம் திகதி இரவு 12 மணியளவில் நித்திரையில் இருந்த போது நான்கு பேர் கொண்ட ஆயுததாரிகள் வந்து இருவரையும் கண்களை கட்டி அழைத்து சென்றனர்.
இருவரையும் ஒரு ஹயஸ் வாகனத்தில் ஏற்றி பொலனறுவை தொடருந்து நிலையத்தில் வைத்து விடுவித்தனர்.
இது தொடர்பில் அந்தக்காலத்தில் உயிர் தப்பிய செல்வராசா தெரிவித்தவை வருமாறு,
எங்களிடம் இருந்த அடையாள அட்டை பறிக்கப்பட்ட போதும் மீள ஒப்படைக்கவில்லை. இருவருக்கும் தலா ரூபா 1000 மட்டும் வழங்கப்பட்டது.
இங்கு வந்து மீண்டும் உயிருடன் செல்லும் நபர்கள் நீங்கள் தான் என்றும் விரைவாக தப்பிச் செல்லுமாறு கூறி விடுத்தனர்.
பொலனறுவையில் இருந்து அதிகாலை 2 மணிக்கு கொழும்புக்கு செல்லும் தொடருந்தில் ஏறி அச்சத்துடன் இருவரும் கொழும்புக்கு வந்து சேர்ந்தோம்.
பத்து தினங்கள் கொழும்பில் மறைவிடத்தில் இருந்து விட்டு எனக்கு ஆவணம் வந்தவுடன் செல்வராசா கொழும்பில் உள்ள தனது வீட்டுக்கு செல்ல கிராம சேவையாளர் உறுதிப்படுத்திய ஆவணத்துடன் திருகோணமலைக்கு சென்று அங்கு கப்பல் போக்குவரத்துசேவையில் பணிபுரிந்த சுபச்செல்வன், ஜெயதாஸ் ஆகியோரின் உதவியுடன் கப்பல் மூலம் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தேன்.
அடுத்த ஆண்டு 2008 ஆம் ஆண்டு வெள்ளவாயவில் வைத்து சகோதரன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டு இன்று வரை அவர் தொடர்பான தகவல்களின்றி உள்ளன.