பிரித்தானியாவில் இலங்கை பெண்ணின் படுகொலை! குற்றத்தை ஒப்புகொண்ட கொலையாளி
கடந்த ஆண்டு வேல்ஸ் தலைநகர் கார்டிஃபில் உள்ள ஒரு வீதியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட இலங்கைப் பெண்ணின் கொலை வழக்கில், ஒரு இலங்கை ஆண் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார் என பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
37 வயதான திசர வெரகலகே (Thisara Weragalage), நியூபோர்ட் கிரவுன் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை(12.01) நடைபெற்ற விசாரணையின் போது, நிவுன்ஹெல்லகே டோனா நிரோதா கலப்னி நிவுன்ஹெல்லா (Niwunhellage Dona Nirodha Kalapni Niwunhella) என்றழைக்கப்படும் நிரோதா (Nirodha) என்பவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
கொலை சம்பவம்
32 வயதான நிரோதா, 2025 ஓகஸ்ட் 21ஆம் திகதி கார்டிஃபின் ரிவர்சைட் பகுதியில் உள்ள சவுத் மோர்கன் பிளேஸ் என்ற இடத்தில், நிறுத்தி வைக்கப்பட்ட இரண்டு வாகனங்களுக்கு இடையில் கடுமையாக காயமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். பின்னர் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், பென்ட்வின் பகுதியைச் சேர்ந்த திசர, ஆரம்பத்தில் கொலை குற்றச்சாட்டை மறுத்திருந்தாலும், சமீபத்திய விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
தண்டனை
இதற்கு முன், கத்தி போன்ற கூர்மையான ஆயுதம் வைத்திருந்ததாக அவர் ஏற்கனவே ஒப்புக்கொண்டிருந்தார்.

மரணத்துக்குப் பிந்தைய பிரதேச பரிசோதனையிலும், நிரோதாவின் மரணத்திற்கான ஆரம்பக் காரணம் பல கூர்மையான காயங்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
விசாரணைக்குப் பிறகு, திசர நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பெப்ரவரி 20ஆம் திகதி தண்டனை அறிவிக்கப்பட உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |