கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் பயணிக்கும் நெடுநாள் கடற்றொழில் படகுகள் மற்றும் கடற்படையினர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இந்த அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனடிப்படையில் நாளை (14-11-2026) முற்பகல் 5.30 முதல் மறு அறிவித்தல் வரை வட அகலாங்கு ஐந்து மற்றும் 15 பாகைக்கும் கிழக்கு நெட்டாங்கு 80 மற்றும் 90 பாகைக்கும் இடைப்பட்ட கடற்பரப்புகளிலும் காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை, பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்துக்கு அப்பாலான கடற்பரப்புகளிலும் கடற்றொழில் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம்
அத்துடன், குறித்த கடற்பரப்புகளில் தற்போது கடற்றொழில் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் உடனடியாகப் பாதுகாப்பான கடற்பரப்புகளுக்குத் திரும்புமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாகத் திணைக்களத்தினால் எதிர்காலத்தில் வெளியிடப்படும் வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் ஏனைய அறிவிப்புகள் குறித்து கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினர் தொடர்ந்தும் விழிப்புடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது வடமேற்கு திசையில் நகர்ந்து எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதியளவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் நவம்பர் 16 ஆம் திகதியளவில் இது மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்பில் சூறாவளியாக வலுப்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |