பலஸ்தீனுக்காக நீதிகோரி படையெடுத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் : ஐக்கிய நாடுகள் பிரதிநிதியிடம் கையளிக்கப்பட்ட கடிதம்
உலகளவில் பேசுபொருளாக இருக்கும் இஸ்ரேல் - பலஸ்தீனிடையேயான போர் குறித்து இலங்கையிலும் விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் பலஸ்தீனத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்து இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கடிதம் ஒன்றை இன்று (14) கையளித்துள்ளனர்.
கடிதம் கையளிக்கப்பட்டது
இந்தக் கடிதத்தில் 159 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் பிரதிநிதி ஒருவரிடம் இந்தக் கடிதம் கையளிக்கப்பட்டதாகவும் இதன் இன்னொரு பிரதியொன்று கொழும்பில் உள்ள பலஸ்தீன தூதுவருக்கும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
உடனடியாகத் தீர்வு காண வேண்டும்
இதற்கு முன்னரும் கடந்த மாதம் நாடாளுமன்றில் ரிஷாத் பதியுதீன் இந்த விடயத்தினை பேசியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உலகத் தலைவர்கள் இந்தப் பிரச்சினைக்கான மூல காரணத்தைக் கண்டறிந்து, இந்தப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காண தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் இஸ்ரேல் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்றும் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த சம்மதிக்குமாறு கோரிக்கை விடுக்க வேண்டும் என்றும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் பதியுதீன் கூறினார்.