சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற 85 பேர் கைது (படங்கள்)
சட்டவிரோத வெளிநாட்டு பயணம்
சட்டவிரோதமாக படகு மூலம் வெளிநாட்டுக்கு செல்ல முயன்ற 85 பேரை சிறிலங்கா கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இன்று (11) அதிகாலை மட்டக்களப்பு கடலில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இன்று மட்டக்களப்பு கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது, பலநாள் மீன்பிடி இழுவைப் படகில் சென்ற 60 ஆண்கள், 14 பெண்கள் மற்றும் 11 குழந்தைகள் உட்பட 85 பேரை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
5 சந்தேகநபர்கள் கைது
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மட்டக்களப்பு, திருகோணமலை, மூதூர், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் மடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, முகத்துவாரம் கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் மூலம், குறித்த 85 பேரை படகு மூலம் வெளிநாட்டுக்கு அனுப்பிய குற்றச்சாட்டில் 05 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
