முட்டாள்தனமாக செயல்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்! சுமந்திரன் சாடல்
இலங்கையின் அரசியலமைப்பை மீறும் வகையில் புதியதொரு சட்டம் தயாரிக்கப்படுமாயின், குறித்த சட்டம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்படுவதை தவிர்க்கும் அதிகாரம் சபாநாயகருக்கு இருப்பதாக இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக எதிர்க்கட்சியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தின் போதே, அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் உள்ள சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகங்களின் கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் வகையில் இணையவழி பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது.
நீதிமன்றில் மனுத்தாக்கல்
இதனை எதிர்த்து நான் உள்ளிட்ட சிலர் மனுத்தாக்கல் செய்தோம். சுமார் 45 மனுக்கள் இந்த சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டது.
இந்த சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென பரிந்துரைக்கப்பட்டது.
எனினும், எனது மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
நம்பிக்கையில்லா பிரேரணை
இந்த நிலையில், குறித்த சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி, அதன் நடைமுறையை சான்றுரைத்த சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை கொண்டு வந்தது.
இந்த பிரேரணை தொடர்பில் சபாநாயகர் விளக்கமளித்துள்ளார். இதன்படி, அரசியலமைப்பு மற்றும் சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கமைய தான் செயல்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் நான் தெளிவுபடுத்த விரும்புகின்றேன். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் சபாநாயகரால் சான்றுரைக்கப்படுவதால் மாத்திரம் அது சட்டமாகாது.
இலங்கையின் அரசியலமைப்பு
இதனை அரசியலமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன், ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டத்தை மற்றுமொரு சட்டத்தை கொண்டு மாற்றியமைக்க முடியாது.
இந்த செயல்முறையை வைத்து சட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது எனவும் கூற முடியாது.
மேலும், சபாநாயகருக்கு எதிரான பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பவர்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும்.
நாடாளுமன்றத்தின் நேர்மை
அவருக்கு எதிரான தனிப்பட்ட கோபம் அல்லது பகை காரணமாக குறித்த பிரேரணை கொண்டு வரப்படவில்லை.
Merely because the #Speaker has endorsed something that went through @ParliamentLK, does not make it law. Because the Constitution specifically says, you cannot suspend the operation of the Constitution or any part of the Constitution. The Speaker, in justifying his conduct in… pic.twitter.com/iro00owSPk
— Manthri.LK_Watch (@ManthriLK_Watch) March 19, 2024
நாடாளுமன்றத்தின் நேர்மையை கேள்விக்குப்படுத்தும் வகையில் சபாநாயகர் செயல்பட்டுள்ளார். இதனை அனைவரும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த சட்டம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டிருக்க கூடாது என்பது பலரும் அறிந்த விடயம்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
அரசாங்கத்துக்கு ஆதரவான மற்றும் முட்டாள்தனமாக செயல்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணையவழி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வாக்களித்தார்கள்.
எனினும், சபாநாயகருக்கு எதிரான பிரேரணையை கல்வியறிவுள்ள அனைவரும் எதிர்ப்பார்கள் என நான் நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |