சட்டவிரோத மணல் அகழ்வினை தடுக்க இரண்டு வார காலத்திற்குள் நடவடிக்கை
காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினரை இணைத்து இரண்டு வார காலத்திற்குள் சட்டவிரோத மணல் அகழ்வு தடுத்து நிறுத்தவேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இன்று(16) கிளிநொச்சி மாவட்ட செயலக மண்டபத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில், சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பான கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
இயற்கை வளங்கள் அழிப்பு
“கிளிநொச்சி மாவட்டத்தில் பல பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்ச்சியாக பல பகுதிகளில் நடைபெற்று வருவதன் காரணமாக பல இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதோடு நெற் செய்கை மேற்கொள்ளப்படும் வயல் நிலங்கள் அழிக்கப்பட்டு வருவதாக பல தரப்பினரால் தகவல்கள் வழங்கப்பட்டன.

இதற்கமைவாக, இரண்டு வார காலத்திற்குள் பாதுகாப்பு தரப்பினர், காவல்துறையினர் மற்றும் கனியவள திணைக்களத்தின் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் ஊடாக கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்ற சட்டவிரோத மணல் கடத்தல்கள் தடுத்து நிறுத்த நடவடிக்கை உடன் மேற்கொள்ளப்பட வேண்டும் .
குறிப்பாக கல்லாறு, உமையாள்புரம், விளாவோடை, தட்டுவன்கொட்டி, இரணைமடு குளத்தின் கனகராயன் ஆற்றுப்படுகை, பன்னங்கண்டி, செருக்கன், முரசுமோட்டை மற்றும் கண்டாவளை அண்டிய பிரதேசங்களும், ஊரியான், முரசுமோட்டை, பெரியகுளம், கிளாலி உள்ளிட்ட அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களிலேயே தொடர்ச்சியாக மண் அகழ்வு இடம்பெறுவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன” என்றார்
இக்கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் முரளிதரன், இராணுவத்தின் 55வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் நனின் ஜெயவர்த்தனா, 551 இராணுவ கட்டளை அதிகாரி யூட் காரியகருவன, விசேட அதிரடிப்படையின் கிளிநொச்சி கட்டளை அதிகாரி, பிரதிப் காவல்துறைமா அதிபர் மற்றும் அரசாங்க அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.
