அதிபர் தேர்தல் வரைக்கும் ரணிலுக்கு ஆதரவு : எஸ்.எம்.சந்திரசேன
அதிபர் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் உறுப்பினரையே நாங்கள் களமிறக்குவோம் என ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம்(31) பொலன்னறுவை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் அறியத்தருகையில்,
பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வு
“ஒருசில விடயங்களை முன்னிலைப்படுத்தி அதிபருக்கும், எமக்கும் கருத்து வேறுபாடுகள் காணப்படுகிறது.
இந்த நிலைமை அரசாங்கத்துக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்காகவே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்தோம்.
அதிபர் தேர்தல் இடம்பெறும் வரை அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், அரசாங்கத்துக்கும் ஒத்துழைப்பு வழங்குவோம்.
2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள அதிபர் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் உறுப்பினரையே நாங்கள் களமிறக்குவோம்.
இரு வேறுப்பட்ட அரசியல் கொள்கைகளை கொண்டுள்ள அரசியல் தரப்பினர் ஒன்றிணையும் போது முரண்பாடுகள் மாத்திரமே தோற்றம் பெறும் என பெரும்பாலான தரப்பினர் வலியுறுத்தியுள்ளார்கள்.
பொருளாதார மீட்சிக்கு அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களால் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை.
தேசிய உற்பத்திகளை மேம்படுத்தவும், தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனை அதிபரிடம் சுட்டிக்காட்டியுள்ளோம்.” என்றார்.