முக்கிய கலந்துரையாடல் - ஐரோப்பிய நாடுகளை நோக்கி பயணமாகும் அதிபர் ரணில்
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் பரிஸ் கிளப் உறுப்பினர்களை சந்திப்பதற்காக சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
அந்தவகையில், ஐக்கிய இராச்சியம் (பிரித்தானியா) மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு அதிபர் விஜயம் செய்யவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
அதிபரின் முக்கிய சந்திப்பு
இலங்கையின் கடன் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக பரிஸ் கிளப் உறுப்பினர்களை அதிபர் சந்திக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை தனது பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக சர்வதேச கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஒக்டோபரில், பரிஸ் கிளப் தனது கடன் நெருக்கடிக்கு முன்கூட்டியே தீர்வு காண்பதற்கான இலங்கையின் தற்போதைய முயற்சிகளுக்கு தனது முழு ஆதரவையும் வழங்குவதாக உறுதியளித்தது.
இந்த வருடம் ஜனவரியில், இலங்கைக்கு விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்கான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஒப்புதலை ஆதரிப்பதற்காக பரிஸ் கிளப் (Paris Club Creditors) நிதியுதவி உத்தரவாதங்களை வழங்கியது.
அதன்பிறகு, ஐ.எம்.எப் 2023 மார்ச்சில் இலங்கைக்கு விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ் சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியை 48 மாத ஏற்பாட்டிற்கு வழங்குவதற்கு ஒப்புதல் அளித்தது.
எவ்வாறாயினும், இலங்கை தனது கடனை மறுசீரமைக்க பல்வேறு கடன் வழங்குநர்களுடன் தொடர்ந்து கலந்துரையாடி வருகிறது.
