பிரதான பொருளாதார மையமாக மாறும் யாழ்ப்பாணம் : ரணிலின் உறுதி!
இலங்கையின் பிரதான பொருளாதார மையமாக எதிர்காலத்தில் யாழ்ப்பாணம் திகழும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
இதற்கேற்ப, எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் வடக்கு மாகாணத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
யாழில் இன்று (22) நடைபெற்ற 20 இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் உறுமய நிகழ்ச்சித்திட்டத்தில் கலந்து உரையாற்றும் போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.
காணிகளின் உரிமை
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “உரிமை என்பது எல்லா மொழிகளிலும் ஒரே அர்த்தத்தை கொண்டுள்ள சொல். சிங்களம் மற்றும் தமிழ் மொழியில் இந்த வார்த்தைக்கு ஒரே அர்த்தம் தான்.
மன்னர் ஆட்சி காலத்தில் காணிகளின் உரிமை மக்களிடமே இருந்தது. பிரித்தானிய யுகத்தில் இந்த நிலை மாற்றமடைந்தது.
மக்களின் காணிகள் அரசாங்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன. ஆங்கிலேயர்களின் சட்டத்துக்கமைய எம்மிடம் நிலத்துக்கான உறுதிப்பத்திரம் இருக்கவில்லை.
மக்கள் காணிகள்
இதனால் இலங்கையில் இருந்த 80 வீதமான காணிகள் அவர்களுக்கு சொந்தமானவையாக மாற்றப்பட்டது. இதனை நான் எதிர்க்கிறேன். மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட காணிகள் மீண்டும் அவர்களுக்கே கொடுக்கப்பட வேண்டும்.
அத்துடன், ஏற்கனவே வீடுகள் கட்டப்பட்டு பயிர்சசெய்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள மக்கள் நிலங்களை உறுதிப்பத்திரம் இல்லாத காரணத்தால் நாம் மீண்டும் மீள பெற்றுக் கொள்ள முடியுமா? இல்லை.
உறுமய வேலைத்திட்டம்
மக்கள் காணிகள் அவர்களிடமே வழங்கப்பட வேண்டும். இதற்காகவே உறுமய எனும் தேசிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழான நடவடிக்கைகளை மே அல்லது ஜுன மாதம் நிறைவு செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளேன்.
வலிகாம வலயத்தில் சிவப்பு மண் உள்ளது. இதனை கொண்டு நாம் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க திட்டமிட வேண்டும்.
நவீனமயமாகும் விவசாயம்
விவசாயத்தை நவீனமயமாக்கும் நடவடிக்கையை நாம் ஆரம்பித்துள்ளோம். ஒவ்வொரு மாவட்டங்களிலும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளோம்.
கோப்பாயிலிருந்து இந்த திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் மூலம் அதிக வருமானத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.
யாழ்ப்பாணத்தின் கோப்பாய் பிரதேசத்தில் நாட்டின் சிறந்த விவசாய நிலம் இருக்க வேண்டும்.
விடுவிக்கப்பட்டுள்ள காணிகள்
இதுவரை 63 ஆயிரம் ஏக்கர் காணிகளை அரசாங்கம் விடுவித்துள்ளது. கடற்படையினர் மற்றும் விமானப்படையினர் வசமிருந்த 5 ஆயிரத்து 200 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
Under the #Urumaya National Program, to distribute 2 million freehold deeds to the deserving public, President Ranil Wickremesinghe symbolically presented deeds, benefiting a total of 408 individuals at a ceremony held at Oddakapulam, #Jaffna.#Land #LKA #PMD pic.twitter.com/vV04lcD6KT
— President's Media Division of Sri Lanka - PMD (@PMDNewsGov) March 22, 2024
அத்துடன், மேலும் பல மக்கள் காணிகள் வன வள திணைக்களத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. இவற்றை மாற்றி, 1985 ஆம் ஆண்டுக்கான வரைபடத்துக்கேற்ப காணிகளை மீண்டும் அதன் உரிமையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளேன்“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |