ரணிலின் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்ட இடைக்கால அறிக்கை : மறுசீரமைக்கப்படவுள்ள தொடருந்து திணைக்களம்!
தொடருந்து திணைக்களத்தை மறுசீரமைக்கும் வேலைத்திட்டத்தை உள்ளடக்கிய இடைக்கால அறிக்கை சிறிலங்கா அதிபரின் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் அடிப்படை திட்டங்கள் தொடர்பில் குறித்த அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக, இது தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் தலைவரும் துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளருமான கே.டி.எஸ். ருவன்சந்ர குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தொடருந்து சேவையை வினைத்திறனுடையதாக மாற்றுதல் மற்றும் அதன் நட்டத்தை குறைத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பான யோசனைகளும் குறித்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
விசேட குழு
தொடருந்து திணைக்களத்தை மறுசீரமைப்பது தொடர்பான யோசனைகளை முன்வைப்பதற்காக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உள்ளிட்ட 16 பேரை உள்ளடக்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டது.
இந்த குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னதாக சிறிலங்கா அதிபரின் செயலாளரிடம் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |