உயிருடன் கொன்று புதைக்கப்பட்ட தமிழர்கள் - ஐநாவின் உதவியை நாடும் இலங்கை
தடயவியல் நிபுணர்கள் உட்பட ஐக்கிய நாடுகளின் (UN) மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் மூலம் தொழில்நுட்ப உதவியைப் பெற தயாராக இருப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் அகழப்படும் மனித புதைகுழிகளில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண உதவுவதும் இத்தகைய ஒத்துழைப்பில் அடங்கும் என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றிற்கு கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மனித புதைகுழிகளை அகழும் செயற்பாட்டு
அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில், மனித புதைகுழிகளை அகழும் செயற்பாட்டுடன் தொடர்புடைய நீதித்துறை அதிகாரிகளின் உத்தரவுகளைப் பொறுத்து, இந்த உதவியைப் பெறும் செயற்பாடு அமையும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை மீதான புதிய தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்புக்குத் திகதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை.
ஆனால் வரைவுத் தீர்மானத்தில் திருத்தங்கள் செப்டம்பர் 25 ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். வரைவுத் தீர்மானத்தில் பெரிய திருத்தங்கள் எதுவும் எதிர்பார்க்கப்படவில்லை.
எனினும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணையகத்தின் கண்காணிப்பில் இருக்கும் என்றும் அமைச்சர் ஹேரத் கூறியுள்ளார்.
இலங்கையின் பொறுப்புக்கூறல்
அதேநேரம் இலங்கையின் பொறுப்புக்கூறல் காலமும் இரண்டு வருடங்களால் நீடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, இலங்கை மீதான மனித உரிமைகள் ஆணையகத்தின் அதிகாரத்தை நீடிக்கும் வரைவுத் தீர்மானத்தை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்திடம், அதன் முக்கிய ஆதரவாளர்களான இங்கிலாந்து, கனடா, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மெசிடோனியா ஆகியன நாடுகள், கடந்த வாரம் ஒப்படைத்தன.
இலங்கையில் பல புதைகுழி தளங்களை அடையாளம் காணப்படுவது, போதுமான வளங்களுடன் தொடர்ச்சியான பணிகள் வழங்கப்பட வேண்டியதன் அவசியம், காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தின் சுயாதீனமான மற்றும் பயனுள்ள செயல்பாட்டின் முக்கியத்துவம் என்பவற்றை இந்தத் தீர்மானம் வலியுறுத்துகிறது.
இதற்கிடையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இந்த ஆண்டுக்குள் இரத்து செய்யப்படும். அதற்குப் பதிலாகப் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம், இந்த ஆண்டுக்குள், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
