இலங்கைக்கு பயணம் செய்யவுள்ள தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின்!
தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் அழைப்புக்கமைய, 76 ஆவது சுதந்திர தின நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அவர் பங்கேற்கவுள்ளார்.
76 ஆவது சுதந்திர தினம்
சுவிஸ் மற்றும் உகண்டாவுக்கான பயணத்துக்கு முன்பதாக இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்க, சில முக்கிய சந்திப்புகளை நாட்டில் முன்னெடுத்திருந்தார்.
இதன் போது, சுதந்திர தின கொண்டாட்டத்தின் விசேட விருந்தினராக தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசினை அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புதிய நாட்டை கட்டியெழுப்புவோம்
அத்துடன், இலங்கையின் வரலாற்றை எடுத்துரைக்கும் வகையில் நினைவு பதிப்பொன்றை அச்சிட்டு வழங்கவும் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதேவேளை, சுதந்திர தினத்தினை 'புதிய நாட்டை கட்டியெழுப்புவோம்' என்ற தொனிப்பொருளில் அனுஷ்டிப்பதற்கும் இதன் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்
மேலும், தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் தலைமையிலான உயர் மட்ட குழுவினரின் இலங்கைக்கான பணயத்தின் போது, இரு நாடுகளுக்கு இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.
தாய்லாந்து உடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இதுவரையில் இருதரப்பினருக்கும் இடையில் எட்டு சுற்று பேச்சு வார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு இறுதி இலக்கை அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |