தமிழ் மக்களுக்கான தீர்வுகளை சிறீதரன் பெற்றுக் கொடுப்பார் : வடிவேல் சுரேஷ் நம்பிக்கை
இலங்கை தமிழரசு கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சிவஞானம் சிறீதரன், நடைமுறையில் சாத்தியப்படக்கூடிய தீர்வுகளை தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுப்பார் என அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் சிரேஷ்ட ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் ஆகியன இணைந்து செயல்படக்கூடிய ஒரு சூழலை சிவஞானம் சிறீதரன் ஏற்படுத்துவார் எனவும் வடிவேல் சுரேஷ் ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்கு தெரிவித்துள்ளார்.
தலைவர் தெரிவு
இலங்கை தமிழரசு கட்சி வாக்குகளின் மூலம் தலைவரை இதுவரை தெரிவு செய்ததில்லை எனவும் சம்பிரதாய முறைக்கேற்ப கலந்தாலோசித்ததன் பின்னர் கட்சியின் தலைவர் தெரிவு செய்யப்படுவார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், சிவஞானம் சிறீதரன் ஜனநாயக ரீதியில் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிட்ட மூவரின் வெற்றி தோல்வி குறித்து விமர்சிக்க தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்கள்
இதேவேளை, இலங்கை தமிழரசு கட்சியின் புதிய தலைவரான சிறீதரன், தமிழ் மக்களின் தேவைகளையும், அவர்களது அபிலாஷைகளையும் முன்னிலைப்படுத்தி செயல்பட வேண்டுமென தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சிவஞானம் சிறீதரனின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த ராதாகிருஷ்ணன், கட்சியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளில் தலைவர் தேர்தலில் சக வேட்பாளராக களமிறங்கிய எம். ஏ. சுமந்திரனையும் இணைத்து கொள்ள வேண்டுமென கோரியுள்ளார்.
அத்துடன், தமிழ் மக்களுக்கான சேவையை இலங்கை தமிழரசு கட்சியின் புதிய தலைவர் சிறப்புற செய்வார் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |