இந்தியாவிற்கு அடுத்து சீனாவிடம் கடன் கோரிய சிறிலங்கா!
அந்நிய செலாவணி நெருக்கடியை அடுத்து கடன் கொடுப்பனவுகளை ஒத்திவைத்த சீனாவிடம் தற்போது மேலதிக நிதி உதவியை சிறிலங்கா அரசாங்கம் கோரியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இந்நிதியுதவியை கோரியுள்ளதாக ஊடக சந்திப்பின் போது சீனத் தூதரகத்தின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இவ் வருடத்தில் இலங்கை சீன வங்கிகளுக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் கடன் தவணையாக செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
நாடு தற்போதைய நெருக்கடியிலிருந்து வெளியேற இந்த கொடுப்பனவுகளை வழங்கி உதவுமாறு சிறிலங்கா அரசாங்கம் உதவி கோரியுள்ளது.
அதுமாத்திரமன்றி, உள்ளூர் தொழில்களுக்கு தேவையான மூலப்பொருட்களை சீனாவில் இருந்து வாங்குவதற்கு தனி கடன் ஏற்பாட்டையும் அரசாங்கம் கோரியுள்ளது.
இந்நிதியுதவி வழங்குவது தொடர்பாக சீனாவின் தரப்பில் கலந்தாலோசித்து வருவதாக சீனத் தூதரகத்தின் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக இலங்கை இந்தியாவிடமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனையும் இந்தியாவில் இருந்து எரிபொருளை வாங்க 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனையும் பெற்றுள்ள நிலையில் சீனாவிடம் இக் கடன் உதவியை கோரியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
