அரசாங்கத்துடன் இணைந்துகொண்ட சுதந்திரக் கட்சி எம்பிக்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை இடைநிறுத்தம்
அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 6 உறுப்பினர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பரிசீலித்து எடுக்கப்பட்ட இத்தீர்மானத்தை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன உரிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
கட்சித் தலைவர் என்ற வகையில் மத்திய குழுவில் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு ஒழுக்காற்று நடவடிக்கையை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டதாக குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடைநிறுத்தப்பட்டுள்ளது
இதன்படி அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர்களான லசந்த அழகியவன்ன, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, ஜகத் புஸ்பகுமார மற்றும் சாமர சம்பத் தசநாயக்க ஆகியோருக்கு எதிராக நடைமுறைப்படுத்தப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்றதையடுத்து, சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஒழுக்காற்று நடவடிக்கையை ஆரம்பித்து அவர்களை இடைநிறுத்தி கட்சியில் அவர்கள் வகித்த பதவிகளில் இருந்து நீக்கியது.
இந்நிலையில், கட்சியின் தீர்மானத்திற்க்கு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நீதிமன்றத்தில் சவால் விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
