லொஹான் ரத்வத்த மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமாயின் - ஆளும்தரப்பு வெளியிட்ட தகவல்
அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்திய இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமாயின் அவர் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை வெளிவர வேண்டும் என ஆளும் தரப்பின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.
குறித்த அறிக்கை வெளிவர முன்னர் அவர் சார்ந்த நடவடிக்கை எதனையும் எடுக்க முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கைதிகளை மிரட்டியமை தொடர்பாக ஓய்வுபெற்ற முன்னாள் நீதியரசர் குசலா கரோஜினி தலைமையிலான குழு கடந்த வாரம் அமைக்கப்பட்டிருந்தது. தற்சமயம் குறித்த குழு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
இந்த நிலையில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கீழ் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியிருப்பதால், கட்சி சார்பான ஒழுக்காற்று விசாரணையின் நிலவரம் குறித்து ஐ.பி.சி தமிழ் , ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசத்திடம் வினவியது.
இதற்குப் பதிலளித்த அவர், முன்னாள் நீதியரசரினால் நடத்தப்படுகின்ற விசாரணைகள் முடிவுறுத்தப்பட்டு அறிக்கை வெளிவந்த பின்னரே லொஹான் ரத்வத்த தொடர்பில் கட்சி கூடி தீர்மானம் எடுக்கும் என்று குறிப்பிட்டார்.
தமிழ் அரசியல் கைதிகள் இருவரை துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய ஸ்ரீலங்கா இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு எதிராக இரண்டு முறைப்பாடுகள் ஸ்ரீலங்கா காவல்துறைத் தலைமையகத்தில் செய்யப்பட்டுள்ள போதிலும் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.