சர்வதேச சதி வலைக்குள் ஆளும் கட்சியின் சிறிய கட்சிகள் - கடுமையாக சாடிய அமைச்சர்
ஆளும் ஶ்ரீலங்கா பொதுஜன கூட்டணி அரசாங்கத்திற்குள் பிளவை ஏற்படுத்த சர்வதேச அளவில் சதித் திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும், இந்த சர்வதேச சதி வலையில் கூட்டணியின் சில சிறு கட்சிகள் விழுந்துவிட்டதாகவும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
நாட்டை முடக்குவதாக அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்த பின்னர் வௌியில் வந்து கடிதம் அனுப்புவது அத்துடன் ஊடகங்களுக்கு அதனை வழங்குவது சதித் திட்டத்தின் ஒரு அங்கம் எனவும் அவர் கூறினார்.
இவ்வாறு நாட்டை மூடுமாறு கடிதம் அனுப்பியதால் கூட்டணிக்குள் குழப்பம் இருப்பதாகவும் அரசாங்கத்திற்குள் பிளவு இருப்பதாகவும் வௌியில் பேசப்படுகிறது. இதனை சிறு கட்சிகள் நேரடியாக பேசித் தீர்த்திருக்க வேண்டும் என்றும் அமைச்சர் காமினி லொக்குகே கூறினார்.
இதேவேளை, கடிதம் எழுதிய நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.