ரணிலுடன் மகிந்த, பசில் பேசியது என்ன..! வெளியானது தகவல்
அதிபர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் அதிபரும் சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச மற்றும் பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச ஆகியோருக்கு இடையில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் எதிர்வரும் தேர்தல் தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை என பொதுஜன பெரமுன நேற்று (10) தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் மகிந்த ராஜபக்சவும் பசில் ராஜபக்சவும் அதிபர் ரணிலை சந்தித்ததாக அண்மையில் ஊடகங்கள் தெரிவித்திருந்தன, மேலும் எதிர்வரும் அதிபர் தேர்தல் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்ட கலந்துரையாடல் வெற்றியளிக்கவில்லை என அந்த ஊடகச் செய்திகள் தெரிவித்தன.
தேர்தல் தொடர்பான எந்த விஷயத்தையும் கலந்துரையாடவில்லை
எனினும், நேற்று (10) கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த பெரமுனவின் பொதுச் செயலாளரும்,நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் , அத்தகைய அறிக்கைகளை மறுத்துள்ளதுடன், மூவரும் தேர்தல் தொடர்பான எந்த விஷயத்தையும் கலந்துரையாடவில்லை என்று கூறினார்.
“மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்சவுக்கு அழைப்பிதழ் கிடைத்து அதிபரை சந்தித்தனர். எந்த தேர்தல் குறித்தும் விவாதம் நடத்தப்படவில்லை. தேர்தல் குறித்து விரைவில் இரு கட்சிகளும் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலின் போது, மகிந்த ராஜபக்சவும் பசில் ராஜபக்சவும் 2020 இல் பெற்ற ஆணை 2022 இல் விக்ரமசிங்கவுக்கு நாடாளுமன்றம் மூலம் மாற்றப்பட்டது என்று ரணிலிடம் விளக்கினர்.
மக்கள் வழங்கிய ஆணைக்கு ஏற்ப
“எங்களுக்கு வாக்களித்தவர்கள் நாட்டைப் பிரிக்காமல், தேசிய பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கும் எதையும் செய்யாமல், தேசிய சொத்துக்களை விற்காமல் அரசாங்கத்தை நிறுவ விரும்பினர். அந்த நிலைக்கு ஏற்ப ரணில் செயற்படுவார் என எதிர்பார்க்கிறோம் என மகிந்த ராஜபக்சவும் பசில் ராஜபக்சவும் அதிபருக்கு அறிவித்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) செல்வாக்கு குறித்து இதன்போது அதிபர் தெரிவித்தார்.இதன்போது மகிந்த ராஜபக்ச, அவர் (விக்ரமசிங்க) அரச தலைவர் என்ற வகையில் தேசிய நலன்களை கவனத்தில் எடுத்து செயற்படுவார் என்று குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |