அமைச்சு பதவிகளுக்காக பனிப்போர்! ராஜபக்சர்களும் உள்ளீர்ப்பு - ரணிலுக்கு சென்ற பெயர் விபரங்கள்
சர்வகட்சி அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை வகிக்க தகுந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலை சிறிலங்கா பொதுஜன பெரமுன அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரசன்ன ரணதுங்க, ஜனக பண்டார தென்னகோன், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன, சி.பி.ரத்நாயக்க, பவித்ரா வன்னியாராச்சி, எஸ்.எம்.சந்திரசேன, நாமல் ராஜபக்ஷ, ரமேஷ் பத்திரன, பந்துல குணவர்தன, சனத் நிஷாந்த, கஞ்சனா விஜேசேகர ஆகியோரின் பெயர்கள் அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
சர்வகட்சி அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்க வேண்டும் என்பதுடன் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் அண்மையில் தெரிவித்திருந்தார்.
சர்வகட்சி அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பு சிறிலங்கா பொதுஜன பெரமுனவிற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்தப் பொறுப்புக்களை நிறைவேற்றி மக்களுக்கு சேவையாற்றுவதே கட்சியின் பொறுப்பு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரணிலின் நிலைப்பாடு
இவரது கருத்து இவ்வாறு இருக்க, சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும் போது அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் செவிமடுத்து திறமைகளின் அடிப்படையில், அமைச்சுப் பொறுப்புக்களை பகிர எதிர்பார்த்துள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருக்கிறார்.
இம்மாதம் 6ஆம் திகதி கொழும்பு நாராஹென்பிட்டி எலிப்பிட்டிகல மாவத்தையில் அமைந்துள்ள ராமஞ்ஞை நிக்காய பௌத்த பீடத்தின் தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது அதிபர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு கூறியிருந்தார்.
சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக அரசாங்கம் தற்போது சில அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அந்தப் பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளது. இந்தக் கட்சிகளில் பல்வேறு கொள்கைகளை கொண்ட அணிகள் இருக்கின்றன.
பேச்சுவார்த்தையில் பெரும்பான்மையான நிலைப்பாடுகளுக்கு இடமளித்து, சரியான வேலைத்திட்டத்தை நாட்டுக்காக முன்வைப்பதே இதன் நோக்கம்” என அதிபர் ரணில் விக்ரமசிங்க கூறியிருக்கிறார்.
தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவை
இதேவேளை, கடந்த மாதம் 22 ஆம் திகதி தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவிப் பிரமாணம் இடம்பெற்றது.
அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் 18 அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.
தற்போதைய அமைச்சர்களது விபரங்கள் வருமாறு,
- பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் - தினேஷ் குணவர்தன
- கல்வி அமைச்சர் - சுசில் பிரேம ஜெயந்த
- கடற்றொழில் வளங்கள் அமைச்சர் - டக்ளஸ் தேவானந்தா
- சுகாதாரத்துறை அமைச்சர் - கெஹெலிய ரம்புக்வெல
- போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் - பந்துல குணவர்தன
- விவசாய மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர் - மஹிந்த அமரவீர
- நீதி அரசியலமைப்பு மறுசீரமைப்பு மற்றும் சிறைச்சாலை விவகாரம் அமைச்சர் - அதிபர் சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ச
- சுற்றுலாத்துறை மற்றும் காணி விவகாரத்துறை அமைச்சசர் - ஹரீன் பெர்னாண்டோ
- பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி அமைச்சர் - ரமேஷ் பத்திரன
- நகர மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் - பிரசன்ன ரணதுங்க
- வெளிவிவகாரத்துறை அமைச்சர் - அலி சப்ரி
- பௌத்த மதம் மற்றும் மத விவகார அமைச்சர் - விதுர விக்கிரமநாயக
- வலுச்சக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் - கஞ்சன விஜேசேகர
- சுற்றாடற்றுறை அமைச்சர் - நஸீர் அஹகமட்
- விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் - ரொஷான் ரணசிங்க
- வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில் அமைச்சர் - மனுஷ நாணயக்கார
- பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் - டிரான் அலஸ்
- வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் - நளின் பெர்னாண்டோ
எவ்வாறு இருப்பினும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு, பிரதி அமைச்சு, இராஜாங்க அமைச்சு என பதவிகளுக்காக ஆளும் கட்சி - எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே பெரும் பனிப்போர் உருவெடுத்துள்ள நிலையில், கட்சித் தாவல்களும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
சர்வகட்சி அரசாங்கத்தின் அமைச்சர்கள் தொடர்பில் வெளியானது முக்கிய தீர்மானம்!
ரணில் அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை தொடர்பில் வெளியான தகவல்..!