கூடிய விலைக்கு விற்க கொண்டு சென்ற டீசல் சிக்கியது (படங்கள்)
சட்டவிரோதமாக கொண்டு சென்ற டீசல்
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் 521லீற்றர் டீசலை லொறியொன்றில் கொண்டு சென்ற ஒருவரை கந்தளாயில் வைத்து கைது செய்துள்ளதாக கந்தளாய் காவல் நிலைய பொறுப்பதிகாரி பிரதீப் தெரிவித்தார்.
இன்று(21) மாலை தம்புள்ளை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டதாக கந்தளாய் காவல் நிலைய பொறுப்பதிகாரி பிரதீப் தெரிவித்தார்.
அதிக விலைக்கு விற்பனை
சந்தேக நபர் சட்டவிரோதமான முறையில் கந்தளாய் பிரதேசத்தில் ஒரு லீற்றர் டீசலை எண்ணூற்றி ஐம்பது ரூபாய்க்கு வாங்கி தம்புள்ளை பகுதிக்கு கூடுதலான விலைக்கு விற்பதற்காக சிறிய லொறியொன்றில் கொண்டு சென்ற போதே கந்தளாய் குற்றத்தடுப்பு காவல்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு கந்தளாய் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் டீசலை கொண்டு செல்வதற்காக பயன்படுத்திய லொறி கந்தளாய் காவல் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
