இணையத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல்
இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு மக்களை ஏமாற்றும் நபர்களை கண்டுபிடிக்கும் பொறுப்பு குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் கணனி குற்றவியல் விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதற்கு அமைய விசாரணைகளுக்காக விசேட பொலிஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இப்படியான பொய்ப் பிரசாரங்கள் காரணமாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இதன் காரணமாக மக்களின் அன்றாட நடவடிக்கைகள் சீர்குலைந்துள்ளன.
அத்துடன் இதன் மூலம் கோவிட் தடுப்பு நடவடிக்கைகளுக்காக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளுக்கு அழுத்தங்கள் ஏற்படுகின்றன. இப்படியான விடயங்கள் மற்றும் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தவும் அவ்வாறான செய்திகளை உருவாக்கி, வெளியிடும் நபர்கள் தொடர்பாகவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஒருவர் பொய்யான செய்திகளை வெளியிட்டு மக்களை குழப்பத்திற்கு உள்ளாக்கினால், பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 98 வது ஷரத்தின் கீழ் தண்டனை பெறக் கூடிய குற்றம் எனவும் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.