தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு - பேரினவாத கட்சிகள் கடும் எதிர்ப்பாம்
இலங்கையில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை காவல்துறை அதிகாரத்துடன் முழுமையாக நடைமுறைப்படுத்த சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு சிங்கள பேரினவாத கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சாகல காரியவாசம், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, கெவிது குமாரதுங்க, சரத் வீரசேகர ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டதாக அவர் கூறினார்.
இனவாத பிரசாரம்

சிறிலங்கா அதிபர் தலைமையில் நேற்று இடம்பெற்ற சர்வகட்சி கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு கோரியதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி தேர்தல் நடத்தினால், வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு காவல்துறை அதிகாரத்தை ரணில் வழங்கி விட்டார் என தென்னிலங்கையில் இனவாத பிரசாரம் மேற்கொள்ளப்படும் என குறித்த கூட்டத்தில் அதிபர் கூறியதாக அவர் தெரிவித்தார்.
இதனால் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது என அதிபர் ரணில் விக்ரமசிங்க திட்டவட்டமாக கூறியதாக மனோ கணேசன் தெரிவித்தார்.
தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு

இதன் மூலம் அதிபர் தேர்தலைத் தவிர வேறு எந்த தேர்தலையும், ரணில் விக்ரமசிங்க நடத்தமாட்டார் என்பது தெளிவாகிறது என அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் இலங்கையில் புதிய அதிபர், புதிய நாடாளுமன்றம், என்ற நிலைமாறல்களுக்கு பின்னரே தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் எந்த மாற்றமும் ஏற்படும் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.