அமைச்சர்களை மாற்றியமைப்பதால் நெருக்கடி தீராது - திஸ்ஸ அத்தநாயக்க சுட்டிக்காட்டு
அமைச்சர்களை மாற்றியமைப்பதால் மாத்திரம் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு கிடைக்காது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
கண்டியில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க (Tissa Attanayake), அமைச்சர்களை பதவி நீக்கம் செய்வதன் மூலம் பொதுமக்களுக்கு சலுகைகள் கிடைக்குமாயின் அரச தலைவர் உட்பட முழு நிர்வாகமும் பதவி விலகி, புதிய அரசாங்கத்தை அமைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“கூட்டுப் பொறுப்பை மீறியதன் காரணமாகவே விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரை அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானம் எடுத்ததாக ஒருவர் வாதிடலாம்.
எனினும் இந்தத் தீர்மானத்தினால் பொதுமக்களின் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது.
நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு, மின்சார நெருக்கடி மக்களை பல்வேறு அசௌகரியத்திற்கு உள்ளாக்கியுள்ள நிலையில், வாழ்க்கைச் செலவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதால் நிர்வாகம் சீர்குலைந்துள்ளது.
ஒன்று அல்லது இரண்டு அமைச்சர்களை பதவி நீக்கம் செய்வதோ அல்லது அமைச்சரவை மாற்றமோ எதற்கும் தீர்வாகாது” என்றார்.
