செம்மணி விவகாரத்தில் திருப்புமுனையாக அமைந்த சோமரத்னவின் முடிவு : சித்தார்த்தன் பகிரங்கம்
சோமரத்ன ராஜபக்ச சர்வதேச விசாரணையில் சாட்சியம் அளிப்பதற்குத் தயாராக இருப்பதாகக் கூறியிருப்பது செம்மணி விவகாரத்தில் மிக முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளது என புளொட் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் (Dharmalingam Siddarthan) தெரிவித்துள்ளார்.
யாழ் - செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்படும் பட்சத்தில், அதில் சாட்சியமளிப்பதற்குத் தயாராக இருப்பதாக கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச தெரிவித்திருப்பதாகக் குறிப்பிட்டு அவரது மனைவி எஸ்.சி.விஜேவிக்ரம ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்குக் (Anura Kumara Dissanayake) கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
அத்துடன் யுத்தகாலத்தில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் நடாத்தப்பட்டுவந்த சித்திரவதைக்கூடங்கள் என்பன பற்றிய விபரங்களை வெளியிடுவதற்குத் தனது கணவர் தயாராக இருப்பதாகவும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
விசாரணைகளைப் புறக்கணித்த சந்திரிக்கா
இந்த நிலையில் இதுகுறித்து கருத்து வெளியிட்ட சித்தார்த்தன், ”ஜனாதிபதி உரியவாறான அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடர் நடைபெறவிருக்கும் நிலையில், இது குறித்து சர்வதேச சமூகம் அவதானம் செலுத்தவேண்டும், நியாயமான சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்” என தெரிவித்தார்.
இதேவேளை சோமரத்ன ராஜபக்சவின் கடிதம் தொடர்பில் கருத்துரைத்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் (Suresh Premachandran), 'கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கு விசாரணைகளின்போதே செம்மணியில் சுமார் 300 - 600 பேர் வரை புதைக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இருப்பினும் அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க (Chandrika Kumaratunga) அதனை ஒரு முக்கிய விடயமாகக் கருதி அடுத்தகட்ட விசாரணைகளை முன்னெடுக்கவில்லை.
செம்மணி மனிதப்புதைகுழி
மாறாக அவ்வேளையில் உரிய முறையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் இராணுவ உயர்மட்ட அதிகாரிகள் பலர் சிறை செல்லவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.
'இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது செம்மணி சித்துபாத்தி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுவரும் சூழ்நிலையில், சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்படுமாயின் இதுபற்றிய உண்மைகளைக் கூறத்தயாராக இருப்பதாக சோமரத்ன ராஜபக்ச தெரிவித்திருக்கிறார்.
எனவே இவ்விவகாரத்தை ஒரு சர்வதேச கட்டமைப்பின் முன்னிலையில் விசாரிப்பதன் ஊடாக மாத்திரமே சகல உண்மைகளையும் வெளிக்கொணரமுடியும். ஆனால் எவ்வேளையிலும் இராணுவத்தைப் பாதுகாப்பதற்கு முற்படும் இலங்கை அரசாங்கம், சர்வதேச விசாரணைக்கான நகர்வுகளை ஒருபோதும் முன்னெடுக்காது.
ஆகவே மிகச்சிறந்த இந்தத் திருப்பத்தை சரியாகப் பயன்படுத்தக்கூடியவகையில் ஜனாதிபதியும், அரசாங்கமும் ஒரு தீர்மானத்தை மேற்கொள்ளவேண்டும்' எனக் குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
