தெற்காசியாவின் முதலாவது Air Dome வசதி கொழும்பு துறைமுக நகரில் திறப்பு
கொழும்பு துறைமுக நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தெற்காசியாவின் முதலாவது நவீன ‘Air Dome’ கட்டமைப்பு எதிர்வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் திறந்து வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
CHEC Port City Colombo (Pvt) Ltd நிறுவனத்தின் காணி அபிவிருத்தி மற்றும் சந்தைப்படுத்தல் நிறைவேற்றுப் பணிப்பாளரும் பிரதிப் பொது முகாமையாளருமான ஷலக்க விஜேரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச மாநாடுகள், கருத்தரங்குகள் மற்றும் கண்காட்சிகள் உள்ளிட்ட பாரிய நிகழ்வுகளை நடத்தும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள இந்த Air Dome வசதியில் ஒரே நேரத்தில் சுமார் 4,000 பேர் அமரக்கூடிய வசதி காணப்படுகின்றது.
4,000 பேர் அமரக்கூடிய வசதி
துபாய் உள்ளிட்ட உலகின் முன்னணி மாநாட்டு மையங்களில் காணப்படும் நவீன கட்டமைப்புகளை முன்மாதிரியாகக் கொண்டு இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக நகரின் பிரதான திட்டத்திற்கு அமைய நிர்மாணிக்கப்படவுள்ள இலங்கையின் மிகப்பெரிய பல்நோக்கு மாநாட்டு மற்றும் கண்காட்சி மையத்திற்கான இடைக்கால வசதியாகவும் இது செயற்படவுள்ளது.
எதிர்காலத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள நிரந்தர மாநாட்டு மையத்தில் 4,000 பேர் அமரக்கூடிய உள்ளக பல்நோக்கு அரங்கமும், 5,000 பேர் வரை தங்கியிருக்கக்கூடிய வெளிப்புறப் பகுதியும் அமைக்கப்படவுள்ளன.
மேலும், இதற்கு அருகில் 400 முதல் 450 அறைகளைக் கொண்ட நட்சத்திரத் தரத்திலான வர்த்தக ஹோட்டல் ஒன்றை நிர்மாணிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |