நடிகர் விஜயகாந்திற்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை!
தே.மு.தி.க தலைவரும் நடிகருமான விஜயகாந்த் திடீரென நேற்றிரவு சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவ பரிசோதனைகளுக்கு பின்னர் அவருக்கு மருத்துவர்கள் குழு தொடர் சிகிச்சை அளித்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சளி மற்றும் இருமல் காரணமாக விஜயகாந்திற்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதாகவும் தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
மருத்துவ சிகிச்சை
மருத்துவ சிகிச்சைகளை நிறைவுசெய்து, இன்னும் ஒரீரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியானதை அடுத்து , அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக கடந்த சில மாதங்களாக பேச்சில் மாத்திரமல்லாமல், உடல் ரீதியாகவும் தளர்வடைந்துள்ள விஜயகாந்த், பொதுநிகழ்வுகளில் அரிதாகவே பங்கேற்றுவருகின்றார்.
வதந்திகள்
எழுந்து நடக்க முடியாத ஒருவராக இருக்கும் அவரை, மனைவி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் மகன்கான விஜய பிரபாகரன் மற்றும் சண்முகபாண்டியன் ஆகியோரே கவனித்துவருகின்றனர்.
நாடாளுமன்றத் தேர்தலில் தே.மு.தி.க யாருடன் கூட்டணி அமைக்கும் என விஜயகாந்தே அறிவிப்பார் என பிரேமலதா விஜயகாந்த் கூறியிருந்த நிலையிலேயே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை அவரது ரசிகர்களையும் ஆதரவாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
எனினும் விஜயகாந்தின் உடல்நிலை பற்றி தவறான தகவல்கள் பரவி வருவதாகவும் அவ்வாறான வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் தே.மு.தி.க. சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |