தென் பகுதியில் தமிழர்களுக்கு குண்டர்களால் ஏற்பட்ட நிலை
தெனியாய – மொறவக்க பகுதியில் வாழும் மலையக தமிழர்கள், தமது வாழ்வாதாரத்திற்காக வளர்த்த வாழைமரங்களை, சில குண்டர்கள் வெட்டி வீசும் சம்பவம் தொடர்பில் தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மொறவக்க பெருந்தோட்ட பகுதியானது, தற்போது பௌத்த பிக்கு ஒருவரின் கட்டுப்பாட்டில் செயற்பட்டு வருவதாக அந்த பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், பல நூற்றாண்டு காலமாக இந்த பிரதேசத்தில் வாழ்ந்து வரும் தாம், வாழ்வாதாரத்திற்காக தமது வீடுகளை அண்மித்த பகுதிகளில் வாழைமரங்களை நட்டு, அதனூடாக வருமானத்தை பெற்று வந்துள்ளதாகவும் பாதிப்புக்குள்ளான மக்கள் தெரிவிக்கின்றனர்.
காவல்துறை நடவடிக்கையையும் எடுக்கவில்லை
இவ்வாறான பின்னணியில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் வாழை குலைகளை விற்பனை செய்ய முயற்சித்த தருணத்தில், அது தமக்கு சொந்தமானது என தோட்ட நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.
இந்த நிலையில், சிலர் குறித்த பகுதிக்கு வருகைத் தந்து, அங்கு வளர்ந்திருந்த அனைத்து மரங்களையும் வெட்டி வீசியுள்ளனர்.
வாழைமரங்கள் மாத்திரமன்றி, ஏனைய செய்கைகளையும் வெட்டியுள்ளதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர். எந்தவொரு செய்கையையும் இந்த பகுதியில் செய்யக்கூடாது என தமக்கு தொடர்ச்சியாக அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாகவும், தமக்கான நியாயத்தை பெற்றுத்தருமாறும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மொறவக்க காவல் நிலையத்தில் பல முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், காவல்துறையினர் இன்று வரை எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
