ஸ்பெயினில் வெடித்த போராட்டம்: 24 மணி நேர வேலைநிறுத்தத்தால் ஸ்தம்பித்த நாடு!
ஸ்பெயின் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் 24 மணி நேரப் பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வீடமைப்புச் செலவுகள் மற்றும் வாடகை உயர்வைக் கண்டித்து இந்த வேலைநிறுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் நான்கு மில்லியன் மக்கள் இவ்வாறு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வேலைநிறுத்தம்
நாடு தழுவிய இந்த வேலைநிறுத்தம் காரணமாகத் தொழிற்சாலைகள், பொதுப்போக்குவரத்து மற்றும் கல்வி நிறுவனங்கள் முடங்கியுள்ளன.
பொதுத்தேர்தல் நடைபெற சில வாரங்களே உள்ள நிலையில் இந்த வேலைநிறுத்த போராட்டம் வெடித்துள்ளது.

கடந்த பத்தாண்டுகளில் ஸ்பெயினில் வீடுகளின் வாடகை 80 வீதம் ஆகவும் வீடுகளின் விற்பனை விலை 63 வீதம் ஆகவும் உயர்ந்துள்ளது.
சுற்றுலாப் பயணிகளுக்கான குறுகிய கால வாடகை வீடுகள் மற்றும் ரியல் எஸ்டேட் ஊக வணிகமே இதற்குக் முதன்மைக் காரணமாக அமைந்தது.
இதனடிப்படையில் தொழிற்சங்கங்கள் மற்றும் வாடகைதாரர்கள் அமைப்புகள் முன்னெடுத்த இப்போராட்டத்தில் வாகன உற்பத்தித் துறை மற்றும் துறைமுகங்களில் 90 வீதம் ஊழியர்களும் மற்றும் கழிவு சேகரிப்புத் துறையில் 82 வீதம் ஊழியர்களும் பங்கேற்றனர்.
அரசியல் நாடகம்
பார்சிலோனா (Barcelona) மற்றும் கத்தலோனியா போன்ற கடலோரப் பகுதிகளில் வீதி மறியல்கள் மற்றும் டயர்கள் கொளுத்தப்பட்டுப் போக்குவரத்து முடக்கப்பட்டது.
நவம்பர் 29 அன்று ஸ்பெயினில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சோசலிசப் பிரதமர் பெட்ரோ சான்செஸ் (Pedro Sánchez) இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் வலதுசாரி எதிர்க்கட்சிகள் இதனை தொழிற்சங்கங்களின் அரசியல் நாடகம் எனக் கடுமையாகச் சாடியுள்ளன.
நாட்டில் வீடமைப்பு ஊக வணிகத்தைக் கட்டுப்படுத்தவும், சுற்றுலா வாடகை அமைப்புகளை ஒழிக்கவும் கடுமையான சட்டங்களைக் கொண்டு வர வேண்டும் எனப் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆங்காங்கே ஏற்பட்ட சிறிய மோதல்களில் 40 இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தேர்தல் முடிவுகளில் இப்போராட்டம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |