எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தியுள்ள தனியார் நிறுவனங்கள்: பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான எரிபொருள் நிலையங்கள் ஊடாக எரிபொருள் விநியோகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் எஸ்.ராஜகருணா தெரிவித்துள்ளார்.
நாட்டில் தனியார் எரிபொருள் நிறுவனங்கள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தியுள்ள போதிலும், அதன் காரணமாக, பொதுமக்கள் தேவையற்ற அச்சமடையத் தேவையில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
லங்கா ஐ.ஓ.சி., சினோபெக் மற்றும் ஆர்.என். பாக் ஆகிய தனியார் நிறுவனங்கள் தமக்கு ஏற்படும் நட்டம் காரணமாக எரிபொருள் விநியோகத்தைச் சற்றுக் குறைத்துள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்.
விநியோகஸ்தர்களுக்குக் கடன் வசதிகள்
இதன் காரணமாகச் சில குறிப்பிட்ட பகுதிகளில் சிறிய அளவிலான நெரிசல்கள் பதிவாகியுள்ளன என்றும், விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இடைவெளியை நிரப்ப பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்குத் தேவையான அளவு எரிபொருள் கையிருப்புகள் விடுவிக்கப்பட்டு வருகின்றன.

விநியோகஸ்தர்களுக்குக் கடன் வசதிகள் விரிவாக்கப்பட்டு, சந்தைப் பங்களிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் இல்லாத 52 பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அங்கு முன்னுரிமை அடிப்படையில் விநியோகத்தை சீர்செய்ய அமைச்சின் செயலாளரினால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |