நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவது மிகவும் சவாலானது: மகிந்த யாப்பா அபேவர்தன
உலகில் தற்பொழுது காணப்படும் சூழ்நிலையில் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவது, குறிப்பாக இலங்கை உள்ளிட்ட அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கு மிகவும் சவாலானதாக மாறியுள்ளது என சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
அங்கோலா நாட்டின் லுவாண்டா நகரில் நடைபெற்ற அனைத்துப் நாடாளுமன்ற ஒன்றியத்தின் 147வது மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உலகம் முன்னெப்போதும் இல்லாதளவு சவால்களுக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் அதன் விளைவுகள், இயற்கை அழிவுகளினால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் அதிகரித்துவரும் மோதல்களால் மனித சமூகத்துக்கும், கிரகத்துக்கும் தாக்கம் ஏற்பட்டிருப்பதால் இந்த நிலைமை தோன்றியுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
பூகோள சவால்கள்
அதேவேளை, இந்த சவால்களை வெற்றி கொள்வதற்கு இலங்கை அயராது உழைத்து வருவதாகவும் சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.
முன்னெப்போதும் இல்லாத பூகோள சவால்களுக்கு மத்தியில் இலங்கை கடந்த ஆண்டு மிகவும் சவாலான காலகட்டத்தைச் சந்தித்ததாக தெரிவித்த சபாநாயகர், சமூக அமைதியின்மை மற்றும் எதிர்ப்புக்களால் ஏற்பட்ட சவால்களை வெற்றிகொள்ளும் செயற்பாட்டில் இலங்கையின் ஜனநாயக நிறுவனங்களை உறுதியாக முன்னெடுத்துச் சென்று அரசாங்கமும், பொது மக்களும் அமைதியான அரசியல் மாற்றமொன்றை நோக்கிப் பயணித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.