அடுத்த தேர்தலில் பெரும்பான்மை பெறுவதில் சிக்கல்! கட்சிகளுக்கு ஏற்பட்ட நிலை
இலங்கையில் அடுத்து நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சியாலும் அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற முடியாத சூழ்நிலை காணப்படுவதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் விஜேலால் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், நாடாளுமன்ற தேர்தலில் பல அணிகள் போட்டியிடவுள்ள நிலையில், வாக்குகள் பிரிந்து செல்லும் வாய்ப்புக்கள் அதிகளவில் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தலுக்கான கூட்டணி
இலங்கையில் அடுத்து நடைபெறவுள்ள தேர்தலுக்காக கூட்டணி அமைப்பது தொடர்பில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி இதுவரை தீர்மானிக்கவில்லை என ஷான் விஜேலால் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கூட்டணி அமைப்பது தொடர்பில் கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் மக்கள் மற்றும் கட்சிக்கு நன்மை பயக்கும் வகையில் இது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்படுமென அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் பல அணிகள் போட்டியிடவுள்ள நிலையில் எந்தவொரு கட்சியாலும் 75 ஆசனங்களுக்கு மேல் கைப்பற்ற முடியாது என ஷான் விஜேலால் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், இலங்கையில் ஆட்சி அமைப்பதற்காக அரசியல் கட்சிகள் கூட்டு சேர வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.