இன்று முதல் பாடசாலை மாணவர்களுக்கு விசேட பேருந்து சேவை
பேருந்து சேவை
பாடசாலை மாணவர்களுக்கு இன்று (01) முதல் விசேட பேருந்து சேவை இடம்பெறவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தற்போது சேவையில் உள்ள 'சிசு செரிய' பேருந்துகளுக்கு மேலதிகமாக இந்த பேருந்துகள் சேவையில் ஈடுப்படுத்தப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா தெரிவித்துள்ளார்.
குறித்த பேருந்து சேவைகள் முதற்கட்டமாக மேல் மாகாணத்தை மையப்படுத்தி முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
40 ற்கும் மேற்பட்ட பேருந்துகள் சேவையில்
இதற்கமைய, மேல் மாகாணத்தில் கம்பஹா, ஹொரணை, களுத்துறை மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளிலுள்ள பாடசாலை மாணவர்களை ஏற்றி செல்வதற்காக இந்த பேருந்துகள் சேவையில் ஈடுப்படவுள்ளன.
அதன்படி, காலை 7.30 மணிக்கு அந்தந்த பகுதிகளில் இருந்து பேருந்துகள் மூலம் மாணவர்கள் பாடசாலைகளுக்கு ஏற்றிச் செல்லப்பட்டு, பாடசாலை முடிவடைந்த பின்னர் மீண்டும் அந்தந்த பகுதிகளுக்கு பேருந்துகள் பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக சுமார் 40 ற்கும் மேற்பட்ட பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
