அடுத்த திட்டம் இதுதான்! விவசாயம் தொடர்பில் அநுரவின் விசேட உத்தரவு
அனர்த்தத்தால் முழுமையாக சேதத்தை எதிர்கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை, விவசாயக் காணிகளின் அளவு மற்றும் தேவையான நிதி என்பன குறித்த அறிக்கையை எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து மீளாய்வு செய்வதற்காக இன்று (07.12.2025) காலை அனுராதபுரம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இதனை கூறியுள்ளார்.
மேலும், வெள்ளத்தால் சேதமடைந்த அனுராதபுர மாவட்டத்தில் பெரும் போகத்தில் நெற்பயிற்செய்கை மேற்கொள்வதற்கு தயார்ப்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
கிடைக்க வேண்டிய இழப்பீடு
இந்த இழப்பீடு, நியாயமாகக் கிடைக்க வேண்டியவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், அதனை அநீதியான முறையில் யாரும் பெறக்கூடாது என்றும் சுட்டிக்காட்டினார்.

விவசாயிகளுக்கு இந்த இழப்பீட்டை நிச்சயமாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் விவசாயிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவும், அவர்களுக்கு மீண்டும் பயிற்செய்கை நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
சேதமடைந்த வீதிகளை மீண்டும் திறப்பதற்கான திட்டம் குறித்து ஜனாதிபதி கேட்டறிந்ததோடு வீதி அபிவிருத்திக்கான நிரந்தர திட்டங்கள் செயல்படுத்தப்படும் வரை தற்காலிக சீரமைப்பு பணிகளை விரைவுபடுத்தவும், மக்களின் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |